புதுடில்லி-மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, டில்லியில் உள்ள அனுமன் கோவிலில் நேற்று, 'அனுமன் சாலிஸா' துதி பாடி, ராணா தம்பதி சிறப்பு வழிபாடு நடத்தினர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

பதற்றம்
இங்கு, கடந்த மாதம் முதல்வர் வீட்டு வாசலில், அனுமன் சாலிஸா துதியை பாடப் போவதாக, சுயேச்சை பெண் எம்.பி., நவ்நீத் ராணாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ராணாவும் அறிவித்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 12 நாட்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு, மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கவே, இருவரும் 5ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, சிறையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து கூறி புகார் அளிக்க, ராணா தம்பதி டில்லியில் முகாமிட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லியில் உள்ள அனுமன் கோவிலில், ராணா தம்பதி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆபத்து
காவி நிற புடவை அணிந்து சென்ற நவ்நீத் ராணாவுடன், அவரது ஆதரவாளர்களும் உடன் சென்றனர். கோவிலில் இருவரும் அமர்ந்து, அனுமன் சாலிஸா துதியை பாடினர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் நவ்நீத் கூறியதாவது:மஹாராஷ்டிராவுக்கு, உத்தவ் தாக்கரே மிகப்பெரிய ஆபத்தாக உள்ளார். மாநிலத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றவே, இங்கு சிறப்பு வழிபாடு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும்?