dinamalar telegram
Advertisement

திருடர்களுக்கு தீனி போடும்  ஆன்லைன் ஸ்டேட்டஸ் ! 

Share
Tamil News
முன்பெல்லாம் திருடர்கள் ஒவ்வொரு தெருவாக நாட்கள் கணக்கில் அலைந்து திரிந்து ... யார் எப்போது வெளியில் செல்வார்கள், எப்போது வருவார்கள், வசதியுள்ளவர்களா என நோட்டமிட்டு வீடுகளில் திருடச்செல்வார்கள். அதை சமூக ஊடகங்கள் வாயிலாக, நாம் அவர்களுக்கு எளிதாக்கி விட்டோம் என்று எச்சரிக்கிறார், போலீஸ் தெற்கு துணை கமிஷனர் உமா!

'ஷாப்பிங் அட் இந்த மால், டின்னர் அட் இந்த ஓட்டல், காசியில் புனித நீராடல், காது குத்து குலதெய்வம் கோவிலுக்கு விசிட், மூன்று நாள் இன்பச்சுற்றுலா'... என, முன் பின் அறிமுகம் இல்லாத பலருக்கு, நமது அன்றாடும் செயல்பாடுகளை, ஸ்டேட்டஸ் என்ற பெயரில், சமூக வலைதளங்களில் பகிர்வதே, திருடர்களுக்கு தகவல்களாக மாறி விடுகிறது என்கிறார் இவர்.

ஒவ்வொரு பதிவுகளில் இருந்தும், உங்கள் பொருளாதார நிலை, செலவினங்கள், எங்கு எப்போது செல்வோம், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் என அனைத்தும் தெரிந்து, தெளிவாக திட்டமிட்டு தற்போது பல திருட்டுகள் அரங்கேறி வருகிறது என நம்மை எச்சரிக்கிறார்.

அவர் கூறியதாவது: வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிய பின் அவ்வீட்டினர் அப்பாவியாக, 'நாங்க யார் கிட்டயும் சொல்லலீங்க மேம்; எப்படி தெரிஞ்சுதுன்னு தெரியலைன்னு' சொல்லுவாங்க. அவங்க சமூக வலைதளங்களை பார்த்தால், ஒவ்வொன்றையும் அப்டேட் செய்து வைத்து இருப்பார்கள். சுற்றுலா முடித்து ஊருக்கு கிளம்பியாச்சு என்பதை கூட 'அப்டேட்' செய்கின்றனர். இவர்கள் பதிவில் இருந்து, எத்தனை மணி நேரத்தில் வீடு திரும்புவார்கள் என்பதை கூட கணித்து, திருடர்கள் கச்சிதமாக செயல்படும் நிலைதான் இன்று.

தேவையற்ற பதிவுகள் வேண்டாமே!
சமூகவலைதளங்களில் தேவையற்ற பதிவுகளை போடாமல் இருப்பது நல்லது. அப்படி போடும் பதிவுகளை நண்பர்கள் மட்டும் பார்க்கும் படி, 'செட்டிங்கில்' பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். 'இன்று சோகமாக இருக்கின்றேன், மகிழ்ச்சியாக இருக்கின்றேன், அப்பா அடித்தார், இதை வாங்கினேன், இந்த உணவு பிடிக்கும்' என தேவையற்ற பதிவுகளை போடுவது சிக்கலை ஏற்படுத்திவிடும். பரிசு, குலுக்கல் என்று தேவையற்ற இடங்களில் மொபைல் எண், வங்கி கணக்கு எண், பெயர் போன்ற விபரங்களை கொடுப்பதும் அபாயத்தை ஏற்படுத்திவிடும். தேவையில்லாத செயலிகளை, டவுன்லோடு செய்து நாமே நமக்கு ஆப்பு வைத்துக்கொள்கிறோம்.

சமூகவலைத்தளங்களில் எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத நபர்களுடன், நட்பு பாராட்ட வேண்டாம். 'நீங்க அழகா இருக்கீங்க, ஏன் இன்னைக்கு டல்லா இருக்கீங்க, டிரெஸ், கண் அழகாக இருக்குது, நண்பர்களாக இருப்போம்...'இப்படியெல்லாம் ஆரம்பிக்கும் பல நட்புகள், விபரீதங்களில் மட்டுமே முடிகின்றன. ஆபாச உரையாடல்கள், வீடியோ கால் போன்றவற்றால் பல பெண்கள் சீரழிந்துள்ளனர். வீடியோ கால் என்பது எளிதாக ரெக்கார்டு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

மிரட்டினால் யாரிடம் சொல்வது?ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி புகைப்படம், வீடியோ போன்றவற்றை வைத்து மிரட்டினால், துணிந்து பெற்றோரிடம் கூறிவிடுங்கள். அம்மா திட்டட்டும், அப்பா அடிக்கட்டும் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இறுதியில் உங்களை அந்த சிக்கலில் இருந்து கட்டாயம் மீட்பது மட்டுமே பெற்றோரின் இலக்காக இருக்கும். நண்பர், உறவினர், மூன்றாம் நபரை நம்பி மீண்டும் மீண்டும் பலர் சிக்கலுக்குள் சிக்கி வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது. சைபர் சிக்கல்களுக்கு, 100 சதவீதம் தீர்வு காண முடியும் என உறுதியளிக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்களின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. நம்மை நாம் விழிப்புணர்வுடன் பாதுகாத்துக்கொள்வதே முக்கியம். 'ஷாப்பிங் அட் இந்த மால், டின்னர் அட் இந்த ஓட்டல், காசியில் புனித நீராடல், காது குத்து குலதெய்வம் கோவிலுக்கு விசிட், மூன்று நாள் இன்பச்சுற்றுலா'... என, முன் பின் அறிமுகம் இல்லாத பலருக்கு, நமது அன்றாடும் செயல்பாடுகளை, ஸ்டேட்டஸ் என்ற பெயரில், சமூக வலைதளங்களில் பகிர்வதே, திருடர்களுக்கு தகவல்களாக மாறி விடுகிறது.

புகைப்படம், வீடியோ போன்றவற்றை வைத்து மிரட்டினால், பயந்து மேற்கொண்டு தவறு செய்யாமல், துணிந்து பெற்றோரிடம் கூறிவிடுங்கள். அம்மா திட்டட்டும், அப்பா அடிக்கட்டும் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இறுதியில் உங்களை அந்த சிக்கலில் இருந்து கட்டாயம் மீட்பது மட்டுமே பெற்றோரின் இலக்காக இருக்கும்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement