மாநில தடகள போட்டி; வீரர்கள் அசத்தல்
கோவை:மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டியில், வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், 94வது மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டி மற்றும் இன்விடேஷனல் மூத்தோர் தடகளப்போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.இதில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., 10000மீ., தடையோட்டம், போல் வால்ட், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடக்கின்றன.ஆண்கள் பிரிவில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோவை ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசனை சேர்ந்த சதீஷ் குமார், 30.24.74 நிமிடங்களில் இலக்கை கடந்து முதல் இடத்தை பிடித்தார். அவரை தொடர்ந்து தமிழக போலீசை சேர்ந்த மணிகண்டன், 31.20.44 நிமிடங்களில் இலக்கை கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். குண்டு எறிதல் போட்டியில் கோவை அத்லெடிக் கிளப்பை சேர்ந்த ரத்தினவேல், 9.37 மீ., எறிந்து முதலிடத்தையும், 8.77மீ., எறிந்து, பாலசுப்ரமணியன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். நீளம் தாண்டுதலில், ராதாகிருஷ்ணன், 5.76மீ., தாண்டி முதலிடத்டதையும், கோவை ஜெனிசிஸ் பவுண்டேசனை சேர்ந்த பர்னபாஸ், 5.72மீ., தாண்டி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., வீராங்கனை பவித்ரா, 4.10மீ., தாண்டி முதலிடத்தையும், 4.00மீ., தாண்டி தென்னக ரயில்வே வீராங்கனை பரணிகா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பத்தாயிரம் மீ., போட்டியில், பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீராங்கனை சவுமியா, 39.57.11 நிமிடங்களில் இலக்கை கடந்து முதலிடத்தையும், 40.33.46 நிமிடங்களில் இலக்கை கடந்து, பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் லாவண்யா இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.இப்போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், ஜூன், 10ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள தேசிய அளவிலான தடகளப்போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர். இன்றும் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள், சீனிவாசன், ஜான்சிங்கராய் செய்திருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!