முதல்வர் வருகை ரத்து; விவசாயிகள் ஏமாற்றம்
அன்னூர்:அன்னூருக்கு முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், அன்னூர் ஒன்றியத்தில் வடவள்ளி உட்பட 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. வடவள்ளி ஊராட்சி, ரங்கப்ப கவுண்டன் புதூரில், வருகின்ற 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் கலெக்டர் சமீரன் தரிசு நிலத்தை ஆய்வு செய்தார். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். திடீரென இரண்டு நாட்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் வருகை ரத்தாகி விட்டது. காணொலிக்காட்சி வாயிலாகவே திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'அன்னூர், எஸ்.எஸ்.குளம், காரமடை ஒன்றியங்களில் அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனமுதல்வர் ஸ்டாலினை நேரில் பார்த்து கோரிக்கை விடுக்கலாம் என ஆர்வமாக இருந்தோம். முதல்வர் வராதது ஏமாற்றம் அளிக்கிறது' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!