dinamalar telegram
Advertisement

ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க., தலைமை திணறல் !

Share
Tamil News
தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்பதில்,அ.தி.மு.க., தலைமை திணறி வருகிறது. அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் இரண்டு எம்.பி., பதவிகளுக்கு, ௩௦௦க்கும் மேற்பட்டோர் போட்டி போடுவதே இதற்கு காரணம்.தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கடும் நெருக்கடிதற்போதுள்ள எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணிக்கு நான்குஎம்.பி.,க்கள் கிடைப்பர்; அ.தி.மு.க., கூட்டணிக்கு இரண்டு எம்.பி., பதவி உண்டு.தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள மூன்று பேர் பதவி காலியாகும் நிலையில், அடுத்து இருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் அ.தி.மு.க, உள்ளது. அதனால், பதவிகளை பெற, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் என, 300க்கும் மேற்பட்டோர், கட்சி தலைமையிடம் மனு கொடுத்துள்ளனர்.ஒவ்வொருவரும் பல்வேறு வகையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு, கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

திடீர் எதிர்ப்புஇந்நிலையில், பழைய முகங்களுக்கே மீண்டும் பதவி தர திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக, பல தரப்பில் இருந்தும், கட்சி தலைமைக்கு கடிதங்கள் வந்து உள்ளன. 'ஏற்கனவே எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி பதவிகளில் இருந்தவர்கள், தேர்தலில் தோற்றவர்கள், வென்றவர்கள் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. இதுவரை வாய்ப்பு தராத சமூகத்தைச் சேர்ந்த, கட்சிக்காக உழைக்கும் நபர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
'எந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால், கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது' என, அந்த கடிதங்களில் வலியுறுத்தி உள்ளனர்.அதேநேரம், சிறுபான்மையினத்தவர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இதனால், இரண்டு எம்.பி., பதவிக்கு யாரை தேர்வு செய்வது என, எதிர்க்கட்சி தலைமை திணறி வருகிறது.கடும் போட்டிக்கு இடையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினரிடம் காணப்படுகிறது.


தி.மு.க., முடிவு என்ன?

கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகள், தலைமை விசுவாசிகள் என்ற அடிப்படையிலும், ஜாதி ரீதியாக பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது..தற்போது, தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருப்பவர்களில் முதலியார், முக்குலத்தோர், அருந்ததியர், கவுண்டர், முஸ்லிம் போன்ற சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் உள்ளது.பதவி காலியாகிற டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் சில மாதங்கள் மட்டும் பதவி வகித்த ராஜேஷ்குமார் போன்றவர்கள், மீண்டும் பதவி பெற முயற்சித்து வருகின்றனர்.அதேசமயம், ஆதிதிராவிடர், நாடார், மீனவர், நாயுடு உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற அதிருப்தியும் ஆளும் கட்சியில் நீடிக்கிறது.ஓட்டு வங்கி கணிசமாக உள்ள எல்லா சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அந்த அடிப்படையில் தான், வேட்பாளர்கள் தேர்வு அமைய வாய்ப்பு உள்ளதாக அறிவாலயத்தில் கூறப்படுகிறது.இதற்கிடையில், தி.மு.க.,வுக்கு கிடைக்க உள்ள நான்கு இடங்களில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது.
'கட்சி மாறி'களுக்கு எதிர்ப்பு

தற்போது பதவி இழக்கும் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, கட்சி தலைமைக்கு நெருக்கமானவர். ராஜேஷ்குமார், சில மாதங்கள் மட்டுமே எம்.பி., யாக இருந்துள்ளார்.எனவே, இவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என, அக்கட்சியினர் உறுதியுடன் கூறுகின்றனர்.பார்லிமென்டில் சிறப்பாக பேசக்கூடிய டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியில் மூத்தவர்; கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டவர்.எனவே, தனக்கு மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.அ.தி.மு.க.,வில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் போன்றவர்கள் அமைச்சர்களாகி விட்ட நிலையில், அதே கட்சியில் இருந்து வந்த தங்கதமிழ்ச்செல்வன், ராஜ்யசபாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் எம்.பி.,பதவி காலியாவதால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோரும் பதவியை குறி வைத்துள்ளனர். அ.ம.மு.க.,வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்த மகேந்திரன், 2021 சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோரும், பதவிக்காக தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்கிடையில், '10 ஆண்டுகள்ஆட்சியில் இல்லாத போதும், கட்சிக்காக விசுவாசமாக உழைத்தவர்களை புறக்கணித்து விட்டு, கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி வழங்கக் கூடாது' என, தி.மு.க.,வில் எதிர்ப்பு குரல் கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது.


- நமது நிருபர் -

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • அப்புசாமி -

  இவிங்க கட்சியிலேயே ரெட்டைத் தலைமை, தர்மயுத்தம்னு தள்ளாடுது. இவிங்க யாரை நியமிச்சு என்ன ஆகப்போகுது?

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  …..

 • duruvasar - indraprastham,இந்தியா

  அதிக காலம் கோபாலபுரம் தெருவிவிலேயே பாய் படுக்கையுடன் படுத்திருந்து காவல் காத்த. ஆலந்தூராருக்கு கட்டாயம் வாய்ப்பு தரவேண்டும்.

 • Suri - Chennai,இந்தியா

  தி மு க ஐந்தாவது இடத்துக்கு முயற்சிக்கவேண்டும்.

Advertisement