Load Image
dinamalar telegram
Advertisement

வேலை தெரியாதவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியம்!

Tamil News
ADVERTISEMENT
''போதையில தகராறு பண்ணி, எஸ்.ஐ.,யையும் ஆபாசமா பேசியிருக்காரு பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தாம்பரம் போக்குவரத்து பிரிவுல ஏட்டா இருந்த ஒருத்தருக்கு, சமீபத்துல எஸ்.எஸ்.ஐ., 'புரமோஷன்' கிடைச்சது... இதுக்காக, தன் போலீஸ் நண்பர்களுக்கு மது விருந்து தந்தாரு பா...

''தன் பழைய சகாவா இருந்து, சமீபத்துல லஞ்ச ஒழிப்பு துறைக்கு போயிட்ட நண்பரையும் அழைச்சிருக்காரு... 'புல்'லா ஏத்துன நண்பர், மேற்கு தாம்பரத்துல ஒரு ஹோட்டல்ல சாப்பிட போயிருக்காரு பா...

''அங்க தகராறு பண்ணி, சேர், டேபிள்களை அடிச்சு, உடைச்சதும் இல்லாம, வெளியில இருந்த கார் கண்ணாடிகளையும் உடைச்சிருக்கார்...

''ரோட்டுல அலம்பல் செஞ்சவர், தாம்பரம் ஸ்டேஷன்ல வசூல் மன்னனா வலம் வர்ற எஸ்.ஐ., ஒருத்தரை பத்தி ஆபாசமா வசைபாடியிருக்கார்... அந்த வழியா போனவங்க, காதை பொத்திட்டே போயிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.--டீ கடை ரேடியோவில், டி.எம்.சவுந்தரராஜனின் பழைய பாடல் ஒலிக்க,

''ராமமூர்த்தி, என்னமா மியூசிக் போட்டிருக்கார் பாருங்கோ...'' என சிலாகித்த குப்பண்ணா, ''இருக்கறதே நாலஞ்சு பேர்... அதுலயும் ஆயிரத்தெட்டு அரசியல் பண்றா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நாளுக்கு நாள் கலகலத்துண்டே போறதோல்லியோ... கட்சியின் இணைச் செயலர் பதவிக்கு, தங்களுக்கு வேண்டியவரை அமர்த்த ரெண்டாம் கட்ட தலைவர்கள் ரெண்டு பேர் முட்டி மோதினா ஓய்...

''கடைசியா அதுல ஒருத்தர் ஜெயிச்சு, தன் ஆதரவாளருக்கு பதவியை வாங்கி குடுத்தார்... இப்ப, என்னடான்னா பதவிக்கு வந்தவர் மேல, 'ஏடாகூட' புகார் வந்திருக்காம்... இதனால, ரெண்டாம் கட்ட தலைவர்களிடம் மறுபடியும் உரசல் வந்துடுத்து ஓய்...

''ஏற்கனவே, கட்சியில சிலர் மீது ஊழல் புகார்கள் வந்துதோல்லியோ... இப்ப, அடுத்தடுத்து புகார்கள் வர்றதால, இது சம்பந்தமா விசாரிச்சு அறிக்கை தர ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியை கமல் நியமிச்சிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஜெய் கணேஷுக்கு ஏன்டா வீட்டை வாடகைக்கு விட்டோம்னு இளங்கோவும், செந்திலும் முழியா முழிக்காவ வே...'' என, பக்கத்தில் இருந்தநண்பரிடம் சொன்னார், அண்ணாச்சி.

''வேலையே தெரியாம, சுளையா சம்பளம் மட்டும் வாங்குறாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''ஊரக வளர்ச்சி துறையில, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்துறை செயல்படுதுங்க... 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்துல 10 வருஷத்துக்கு மேல அனுபவம் இருக்கிறவங்களை, 'சாதாரண கிரேடு'ல இ.ஓ.,வா நியமிச்சு, மாசம் 35 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமா தர்றாங்க...

''அதே நேரம், வேலையே தெரியாம, மூணு வருஷத்துக்கும் குறைவான அனுபவம் உள்ளவங்களை, 'யங் புரபஷன்'னு போட்டு, 45 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமா குடுக்கிறாங்க...

''இவங்க, இ.ஓ.,வுக்கு தப்பு, தப்பா ஐடியா குடுக்கிறாங்க... எந்த வேலை பார்க்கணும்னு கூட நிறைய பேருக்கு தெரியலைங்க... இந்த லட்சணத்துல இப்ப, 35 சதவீதம் சம்பளத்தை உசத்தி கேட்கிறாங்க... 'இந்த கொடுமையை எங்க போய் சொல்றது'ன்னு இ.ஓ.,க்கள் புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர்.


************

தலைவர் பதவிக்கு மோதும் மகளிர் காங்கிரசார்!''சம்பளம் குடுக்காம வேலை செய்ய சொன்னா, எப்படி செய்வாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தபடியே இஞ்சி டீயை உறிஞ்சினார், அன்வர்பாய்.
''எங்க ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், கூடலுார் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில ஆறு வனச்சரகங்கள் இருக்குது... இங்க வனத்துறையினருக்கு உதவியா, யானை கண்காணிப்பு குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவிரைவு குழு
வினர்னு மூணு குரூப் பணியில இருக்காங்க பா...

''இதுல, வேட்டை தடுப்பு காவலர்கள் தவிர மத்த ரெண்டு குரூப்புக்கும், ஏழு மாசமா சம்பளம் பாக்கி... போன பிப்ரவரி மாசம், 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய அரசு, இவங்களுக்கான சம்பள பாக்கியை உடனடியா, 'செட்டில்' பண்ண சொன்னது பா...

''ஆனா, இதை கண்டுக்காத கூடலுார் வனக்கோட்ட அதிகாரிகள், அந்த நிதியை வேறு பணிகளுக்கு செலவு செஞ்சிட்டாங்களாம்... ராப்பகலா யானை விரட்டுற பணியில இருக்கிறவங்க, கடும் மன உளைச்சல்ல தவிக்கிறாங்க...

''இது பத்தி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு தகவல் போயும், அவரும் மவுனமா இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''ஆபீசர்கள் போட்ட, 'குஸ்தி' சினிமாவையே மிஞ்சிடுத்தாம் ஓய்...'' என, உரக்க சிரித்தார் குப்பண்ணா.

''என்ன வே சொல்லுதீரு...'' என்றார், அண்ணாச்சி.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் ஆயிடுத்தோல்லியோ... அவாளோட சாதனை விளக்க நிகழ்ச்சி, திருப்பூர்ல நடந்துது ஓய்...

''மக்களுக்கு செய்திகளை சொல்ற துறையின் அதிகாரிகள், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ஓடியாடி வேலை செஞ்சுண்டு இருந்தா... நிகழ்ச்சி அன்னிக்கு பெரிய ஆபீசர் மாங்கு, மாங்குன்னு வேலை பார்த்துண்டு இருந்தார் ஓய்...

''அவருக்கு உதவியான சின்ன ஆபீசர், திருவாரூர் தேர் போல ஆடி அசைஞ்சு வந்துருக்கார்... 'ஏன்யா லேட்டு'ன்னு பெரிய ஆபீசர் கேட்க, சின்ன ஆபீசர் ஏடாகூடமா பதில் சொல்ல, ரசாபாசமாயிடுத்து ஓய்...

''அறைக்கதவை சாத்தி, மாறி மாறி கூச்சல் போட்டிருக்கா... மத்தவா தலையிட்டு ஒருவழியா சமாதானப்படுத்தியிருக்கா... துறை அமைச்சரின் மாவட்டத்துலயே அதிகாரிகள் போட்ட, 'குஸ்தி' அமைச்சருக்கு தெரிஞ்சும், அமைதியா இருக்காராம் ஓய்...''
என்றார், குப்பண்ணா.

''சதீஷ்குமார் இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''மகளிர் காங்கிரசார் மத்தியில, தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருக்குதுங்க...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறியபடியே தொடர்ந்தார்...

''தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தல், வர்ற ஆகஸ்ட்ல நடக்குதுங்க... 'இந்த முறை பெண்களுக்கு தான் முன்னுரிமை'ன்னு மாநில தலைவர் அழகிரி சமீபத்துல கொளுத்திப் போட்டாலும் போட்டாரு, மகளிர் காங்கிரசார் உற்சாகமாகிட்டாங்க...

''தலைவர், 'ரேஸ்'ல எம்.பி., ஜோதிமணியின் பேரு தான் முதல்ல இருக்குது... ஆனாலும், 'எங்களுக்கும் வாய்ப்பு குடுங்க'ன்னு, 'எம்.எல்.ஏ., விஜயதாரணி, 'மாஜி' எம்.பி., ராணி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் ஹசீனா சையதுன்னு ஒரு பட்டாளமே மோதுதுங்க...

''கட்சிக்காக இவங்க செஞ்ச பணிகளை புத்தகமா தயாரிச்சு, டில்லியில சோனியாவை பார்த்து குடுத்து, தலைவர் பதவியை கைப்பற்ற, பெண் நிர்வாகிகள் தயாராகிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''அப்படின்னா அதிரடியான, 'ஆக் ஷன் பிளான்' இருக்கும்னு சொல்லுங்கோ...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement