லஞ்சம் கொடுக்க கற்றுத்தருகிறதா பாரதியார் பல்கலை? கோவை எம்.பி., கண்டனம்

பாரதியார் பல்கலையில் நேற்று, 37வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் ரவி தலைமையில் நடந்தது. படித்து முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் இந்நிகழ்வு குறித்து, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு, பணம் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. பல்கலை நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை, கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது. இது குறித்து கோவை எம்.பி., நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், செய்தி வெளியிட லஞ்சமாக பல்கலை நிர்வாகம், ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பதை எந்த செலவு கணக்கில் எழுதுகிறார்கள்? எந்த ஊழலை மறைக்க வேண்டும் என்பதற்காக, பணத்தை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து பல்கலை நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது என்ற கேள்வி எழுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தது, தமிழக கவர்னருக்கு தெரிந்து நடைபெறுகின்றதா? இதுதான் பல்கலைக்கழகத்தின் நடைமுறையா? எதை மறைக்க வேண்டும் என, பல்கலை நிர்வாகம் கருதுகிறது? தமிழகம் முழுவதும் பல்கலைகளில் துணைவேந்தர்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக, விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போது, இவ்வளவு பகிரங்கமாக பல்கலை மேடையில் தமிழக கவர்னரும், உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அமர்ந்திருக்கும்போதே, நிகழ்ச்சி அரங்கில் வைத்து பணம் கொடுப்பதன் மூலம் அங்கு இருந்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலை நிர்வாகம் எதை சொல்லி கொடுக்கிறது?
'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்...' என கவி பாடிய பாரதியின் பெயரில் இயங்கும் பல்கலையில், லஞ்சத்திற்கு எதிரான சிந்தனைகளை உருவாக்காமல், லஞ்சத்தை வளர்க்கும் விதமாக பல்கலை நிர்வாகம் செயல்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிற பெயரில், கண்துடைப்பாக கடைநிலை ஊழியரை பலிகடா ஆக்காமல், உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (16)
இதே போல நமது வாக்காள பெரு மக்களும் கொடுக்கும் பணத்தை திரும்ப மூஞ்சியில் அடித்தால் நல்லது
இதே ஸ்டாலின் நிகழ்ச்சியைக் கவர் பண்ண குடுத்திருந்தா வெளியே வந்திருக்காது. கவர்னர் நிகழ்ச்சிக்குங்கறதுனாலே அவர் பேரைக் கெடுக்க சும்மா ஊதி பெருசாக்கரங்க.
உங்க கம்யூனிஸ்டுகளுக்கு திமுக போட்ட பிச்சை அதற்குள் 😇மறந்துவிட்டதா நடராஜன்?. ஏழை பத்திரிக்கையாளர்களுக்கு ஐந்தோ பத்தோ கொடுத்தால் ஏன் வயிற்றெரிச்சல்? உங்கள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அடுத்த நிமிடம் உங்களை சாதி பின்புலத்தைக் குறிப்பிட்டு ஆபாசமாக திட்ட அந்த கட்சி தயங்காது தெரியுமல்லவா?)
நடராஜன் அவர்களுக்கு இந்த கடிதம் எழுத தகுதியில்லை... கடந்த தேர்தலில் திமுகவிடம் இவரது கட்சி 10 கோடி வாங்கியதே... அந்த பணத்தில் தானே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்... இல்லையென்றால் கட்சியை அடமானம் வைத்தீர்களா?
திரு பொன்முடி அமைச்சர் அவர்கள் மற்றும் கவர்னர் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இப்படி நடந்து இருப்பதை தீர விசாரிக்க வேண்டும். ஐநூறு ருபாய் வைத்து கொடுத்தது யார் என கண்டறிய வேண்டும். இது லஞ்சம்னா எதற்காக லஞ்சம்னு விசாரிக்க வேண்டும். அப்படி ஒரு புகாரையும் யாரும் தெரிவித்ததாக தெரிய வில்லை. திரு நடராஜன் MP அவர்கள் தனது அன்பவத்திற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.