பாதுகாப்பான மாநிலம்
சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்கும். அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு அடிப்படை அமைதியை உருவாக்கியது உள்துறை. திமுக ஆட்சியில் வன்முறை, ஜாதி சண்டை, மதமோதல், துப்பாக்கிச்சூடு, அராஜகம் இல்லை. இது தான் ஆட்சியின், உள்துறையின் சாதனை. தமிழக மக்கள் அமைதியாக வாழ அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளோம். இதனை உருவாக்கியது உள்துறை. சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிற்சாலைகள் திரும்புகின்றன. வெளிநாட்டு முதலீடுகளும் குவிந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பான , அமைதியான மாநிலம் தமிழகம்.
இடமில்லை
குற்றங்களே நடக்காத சூழல் உருவாக்கி தருவது அரசின் கொள்கை. கொலை, திருட்டு, பலாத்காரம், போதை பொருள் சம்பவங்கள் ஆகியவை பெரிய குற்றங்கள். இது நடக்காத சூழல் உருவாக திட்டமிட வேண்டும். மதம் மற்றும் ஜாதி காரணமாக வன்முறை தூண்டி, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டமிடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல்துறை சார்ந்த ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாராமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். சிபாரிசு வந்தாலும், சட்டத்தின்படி நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அரசில் இடமில்லை.
முற்றுப்புள்ளி
போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாவது கவலை அளிக்கிறது. குட்கா நடமாட்டத்தை தடுத்து போதைப்பொருள் பயன்பாட்டை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைபொருள் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடாது. கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூலிப்படை வைத்து தொழில் செய்பவர்களை துடைத்தெறிய வேண்டும். யாரும் கை நீட்டி குற்றம் சாட்டாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்.கூலிப்படைகளை கட்டுப்படுத்த ஈவு இரக்கம் இல்லாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூலிப்படைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.கூலிப்படையினர் எங்கோ ஓடி மறைந்தனர். ஒளிந்தனர் என்ற அளவுக்கு அவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள்.
குற்றங்கள் தடுப்பு
இணையதளத்தில் வன்முறை பேச்சுகள் அதிகரித்துள்ளன. அவற்றை கண்காணிக்க வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை வைத்து காவல்துறையை கொச்சைப்படுத்த வேண்டாம். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் போலீசாரை களங்கப்படுத்தக்கூடாது.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறது இந்த ஆட்சி. இந்த அரசின் நோக்கம் குற்றங்களை தடுப்பதே. அந்த நடவடிக்கை ஒன்றே மக்களின் நம்பிக்கையை பெற்று தரும். மக்களுக்கும் காவல்துறைக்கும் நட்பு இருப்பதால், குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
குண்டர் சட்டம்
சந்தேக நபர்களை விசாரிக்கும் போது நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் 140 கோடி ரூபாய் மதிப்புக்கு மீட்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில், 3,632 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் 2,483 நபர்கள் தண்டனை அனுபவிக்காமல் வெளியே வந்தனர். அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 16 துப்பாக்கிச்சூடு நடந்தது. தி.மு.க., ஆட்சியில் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 30 கூலிப்படை கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில் 16 சம்பவங்கள் நடந்தன.
3 ஆயிரம் போலீசார் தேர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் மக்கள் புகார் அளித்து வருகின்றனர். 2021ம் ஆண்டு மே மாதம் 2022 மார்ச் வரை 4496 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 3,341 வழக்குகள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1050 வழக்குகளும், பெண் கடத்தல் தொடர்பாக 540 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மததுவேஷங்களுக்கு உருவாக்குவோரை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அப்படி செய்பவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். விரைவில் 3 ஆயிரம் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.
கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு... எப்படி வேண்டுமானலும் கனவு காணலாம்!!!