வங்கக் கடலில்அந்தமான் அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, இன்று புயலாக மாறியது .இது, இரண்டு நாட்களில் வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நெருங்கும். இந்த புயலுக்கு, 'அசானி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மற்றும் வடக்கு கடலோர பகுதிகள் என, 17 மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐந்து நாட்களுக்கு மழை
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக மாறும். இந்த புயலுக்கு, இலங்கை வழங்கியுள்ள, 'அசானி' என்ற பெயர் சூட்டப்படுகிறது.
இதனால், தமிழகத்திற்கு நாளை முதல், ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.அதன்பின், வடக்கு, வட கிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நகரும்.இதன் காரணமாக, அந்தமான், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும்; மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை முதல் இரண்டு நாட்களும் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, இந்த பகுதிகளுக்கு மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
கன மழைக்கு வாய்ப்பு
இன்று, சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நாளை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், அரியலுார், திருச்சி, கரூர், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னையில் அதிகபட்சம் 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
40 டிகிரி செல்ஷியஸ்
நேற்று காலை நிலவரப்படி, மணமேல்குடி, ஜெயங்கொண்டம், 7; அதிராம்பட்டினம், 6; திருத்தணி, 5; கீழ்பெண்ணாத்துார், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக வேலுாரில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னை, கடலுார், தஞ்சாவூர், திருச்சி, தொண்டி 38; திருத்தணி, ஈரோடு, கரூர் பரமத்தி 39; மதுரை 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.
இந்த 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டியது.
சொல்லவே இல்லை, நல்ல உபகரணங்கள் எல்லாம் வந்து விட்டதா.அங்கேதான் தலை நீங்க நிக்குறீங்க , கடிதம் போட்டவுடன் பயந்து கொடுத்துட்டாங்களே.