தி.மு.க., ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சட்டசபையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் 5 புதிய திட்டங்களை அறிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
காலை சிற்றுண்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் 1 முதல் 5 வரை படிக்கும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும் காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பரிசோதனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரந்துபட்ட அளவில் மருத்துவ பரிசோதனைகள் செய்ய உள்ளோம். மருத்துவ பரிசோதனை, தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியுடன், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து இணை உணவும் வழங்கப்படும்.
தகைசால் பள்ளிகள்
டில்லியில் உள்ளது போல், தமிழகத்திலும் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும்.25 மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.150 கோடி மதிப்பில் அனைத்து கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடு ஊக்கப்படுத்தும் நேரத்தில், அவர்களின் கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளித்து, திறமைகளை மேம்படுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வகை திறன்களை கொண்டு வந்து ஆளுமை திறன் மேம்படுத்தப்படும். தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளது போல், நகர்ப்புறங்களிலும் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளிலும் 180 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடத்தில் 708 மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மதியம் 4 முதல் இரவு 8 மணி வரையிலும், புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வகையில், டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்
சட்டசபை தேர்தலுக்கு முன்பு அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் மனுக்களை பெற்று, ஆட்சி அமைத்த பிறகு, அந்த மனுக்களை பரிசீலனை செய்ய தனித்துறை உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் வர உள்ளது. நிறைவேற்றப்படாத அவசிய தேவைகள் குறித்து எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை அடிப்படையில் கலெக்டர் பரிசீலனை செய்வார்கள்.
இதில் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்குவோம். முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் குறித்த பட்டியலை எம்.எல்.ஏ.,க்கள், சம்பந்தப்படட மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம். அதில், முக்கிய திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டம் நேரடியாக எனது கண்காணிப்பில் நடக்கும். எனது தொகுதியான கொளத்தூராக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதி அல்லது பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியாக இருந்தாலும் சமமாக நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வாசகர் கருத்து (40)
இதுதான் திராவிட ஆட்சியின் லட்சணம். முதலில் மதிய உணவு வழங்கினார்கள்.பல்லாண்டுகள் ஆண்ட பின் காலை உணவும் வழங்கப்படும் என்றால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா, தாழ்ந்திருக்கிறதா ?. நல்லாட்சி என்றால் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, மதிய உணவு திட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும் அல்லவா?. சிந்தியுங்கள் மக்களே உங்கள் அரசு நடத்தும் சாராய கடைகளை மூடினாலே பல குழந்தைகளுக்கு தங்கள் வீட்டில் சாப்பாடு கிடைக்கும் முதல்வரே
புரூடா விடியல் ஐயா அழுகி போன முட்டைங்கள லம்ப்பா வாங்கியாச்சா
ம்ம்ம், அடுத்த ஊழலுக்கான ஊற்றுக்கண் திறக்கப்பட்டுவிட்டது, வாழ்த்துக்கள்
மக்களை திசை திருப்ப இப்படி எதாவது திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருப்பார்.ஒரு திட்டமும் உருப்படியாக செயல் படுத்தப்படாது.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதம் முன்னர் கூட எதாவது ஒரு கவர்ச்சி திட்டத்தை அறிவிப்பார்.
பள்ளிக்கூடம் பத்து மணிக்குத்தான் ஆரம்பிக்கும் - அதுவரை பிள்ளைகள் சாப்பிடாம இருக்கணும்