யமுனை ஆற்றிலே..ஈரக்காற்றிலே

கேரளா மாநிலம் சொரனுாரில் பிறந்தவர், சிறு வயது முதலே இசையில் விருப்பம் உண்டு எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை இவரது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
இவரது தந்தை ரயிலில் பயணிகள் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்யும் பணியில் இருந்தார்.திடீரென அவர் இறந்துவிட அந்த வேலை வள்ளிக்கு கிடைத்தது.
மிகவும் சிரமமான வேலைதான் இருந்தாலும் அதிலும் பொறுமையோடு கடமையாற்றினார் அவரது பொறுப்புணர்வை பார்த்த அதிகாரிகள் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வேலைக்கு முயற்சிக்க வழிகாட்டினர் அதன்படி அதற்கான தேர்வு எழுதி டிக்கெட் பரிசோதகரானார்.

மலை ரயிலில் பயணிக்க உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருகை தருகின்றனர் ரயிலில் நான்கு பெட்டிகள் என மொத்தம் முன்னுாறு பேர் வரை பயணிப்பர் சுமார் நான்கு மணி நேர பயணம் டிக்கெட் பரிசோதனையை அதிகம் போனால் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவார் அதன் பிறகு மூன்று மணி நேரம் அந்த ரயிலில் சும்மாதான் இருக்கவேண்டும்.
அப்போதுதான் அவருக்குள் இருந்த குழந்தை பருவத்து பாடகி விழித்தெழுந்தாள்,மெல்லிய குரலில் ரயிலில் பாடிக்கொண்டே வருவார் இது பயணிகள் பலருக்கும் பிடித்துப் போய் கைதட்டி பாராட்டாலாயினர்.
ஒரு முறை சென்னையில் இருந்து குழுவாக வந்தவர்கள் ரயிலிலேயே பாட்டுக்கு பாட்டு நிகழ்வை நடத்தினர் என்னையும் கலந்து கொள்ள வற்புறுத்தினர் அதில் கலந்து கொண்டு பாடிய பிறகு மனதிற்கு உற்சாகமாக இருந்தது.இந்த நிகழ்வு ஊடகத்தில் வந்தும் பலரது பாராட்டையும் பெற்றுத்தந்தது.

அதன்பிறகு மலை ரயில் பயணிகளை பாடச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி படுகு உள்ளீட்ட மொழிகளில் பாடி உற்சாகப்படுத்தினார்.அதன் பிறகு ரயில் ஊட்டி போகும் வரை உற்சாகம்தான் சந்தோஷம்தான்.கடந்த பத்து வருடங்களில் மலை ரயிலில் பயணித்த யாராக இருந்தாலும் வள்ளி மேடத்தை மறக்கமாட்டார்கள் அந்த அளவு அன்பாக பண்பாக பழகுவார் பாடுவார் பாடச்சொல்லி ரசிப்பார்.
என்னுடன் நிறைய பேர் புகைப்படம் எடுத்துக் கொள்வர் உலகம் முழுவதும் இருந்து பாராட்டு வரும், யார் என்று பார்த்தால் மலை ரயிலில் பயணம் செய்தவராயிருப்பர்.
மலை ரயில் பயணத்தின் போது மண் சரிவு யானைகள் நிற்பது காரணமாக அவ்வப்போது ரயில் தாமதமாகும் அப்போது எல்லாம் அதிகப்படியான பாடல்களால் அந்த இடமே உற்சாகமாகிவிடும்.இவருக்கு ஐநுாறுக்கும் அதிகமான பாடல்கள் மனப்பாடமாக பாடத்தெரியும்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகாலம் மலை ரயிலில் பாட்டும் பயணமுமாக இருந்த வள்ளி கடந்த மார்ச் மாதத்தோடு பணி நிறைவு பெற்றுவிட்டார்.அவர் அதிகம் பாடியதும் அவரை பயணியர் அதிகம் பாடச்சொல்லி திரும்ப திரும்ப கேட்டதுமான பாடல் யமுனை ஆற்றிலே..ஈரக்காற்றிலே..என்ற பாடல்தான்..
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி இப்போது பயணம் மலை ரயிலில் பயணம் செய்த பழைய பெண் பயணி ஒருவர் தன்னுடைய குழந்தையிடம் ஒவ்வொரு இடமாக காட்டிக்கொண்டே வந்தவர், இந்த இடத்தில் இருந்துதான் வள்ளி மேடம் ‛ யமுனை ஆற்றிலே..ஈரக்காற்றிலே..' பாடல் பாடுவார் என்று சொல்லி பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறார்...
-எல்.முருகராஜ்-படம்,தகவல் :குன்னுார் உன்னி
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!