மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றது தொடர்பான விவகாரத்தில் ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி ஏற்றதாக மருத்துவ மாணவர் பேரவையினர் விளக்கமளித்தனர்.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில், தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, 'மகரிஷி சரக் சபத்' என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக் கூறி ஆங்கிலத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததால், கல்லுாரி, 'டீன்' ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ், துணைத்தலைவி தீப்தா, பொது செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் வரவேற்பின் போது, தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த சமஸ்கிருத உறுதிமொழியை நாங்களாகவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வாசித்தோம். நிர்வாகத்திடம் உறுதிமொழியை காண்பிக்கவில்லை. தேசிய மருத்துவ கமிஷன் 2019ல் பரிந்துரைத்த பாடத்திட்டத்தை பின்பற்றுகிறோம். அதில் இந்த உறுதிமொழியும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை கட்டாயமாக வாசிக்க வேண்டும் என குறிப்பிடவில்லை.

மாணவர்கள் குழுவாக செயல்பட்டு ஆளுக்கொரு வேலைகளை செய்தோம். நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாக இந்த உறுதிமொழியை பதிவிறக்கம் செய்து ஆங்கிலத்தில் மாற்றி வாசித்தோம். வேண்டுமென்று திட்டமிட்டு செய்யவில்லை. இந்த உறுதிமொழியை கட்டாயமாக வாசிக்கக்கூடாது என்றோ பழைய உறுதிமொழியை கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்றோ யாரும் கூறவில்லை. எதிர்பாராமல் நடந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் மதுரை கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்த மருத்துவ மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
டீன் விளக்கம்
இந்நிகழ்வு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட டீன் ரத்தினவேல் கூறுகையில், ‛சமஸ்கிருதத்தில் உறுதிமொழி வாசிக்கப்படவில்லை. ஆங்கிலத்திலேயே வாசிக்கப்பட்டது. உறுதிமொழியை வாசித்த பிறகுதான் எனக்கே தெரியும். சமஸ்கிருதத்திலேயே முற்றிலும் உறுதிமொழி வாசிக்கப்பட்டதாக நினைத்து என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். தவறான புரிதலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். உண்மையை கண்டறிந்து என் மீதான நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும்' என்றார்.
உங்க விளக்கங்களில் பல ஓட்டைகள், முரண்பாடுகள் தெரிகின்றனவே.....டீனை காப்பாத்த நடந்த நிகழ்வுகளை வேறுவிதமாக செதுக்கி/தொகுத்து தவற்றை மாணவர்கள் தங்கள் மீது போட்டுக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்....