தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல் இறந்தார். அவருக்கு நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதியில் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த பங்களா, அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கூலிப் படைஇந்நிலையில், 2017 ஏப்., 23ல், கோடநாடு பங்களாவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கொள்ளையில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதுார், 57, என்பவர் கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார், 37, என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ், 36, என்பவரை தேடினர். இவர், திடீரென சாலை விபத்தில் பலியானார். தொடர் விசாரணையில், கோடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப் படையினர் சயான், 36, வாளையார் மனோஜ், 42, உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் அருகே, குடும்பத்துடன் காரில் சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதியதில், சயான் படுகாயத்துடன் தப்பினார். ஆனால், அவரது மனைவி வினு பிரியா, 31, மகள் நீது, 6, ஆகியோர் பலியாகினர்.
அதேபோல், கோடநாடு பங்களாவில், கணினி இயக்குனராக பணிபுரிந்த, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கெங்கரையைச் சேர்ந்த தினேஷ்குமார், 29, என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
மர்ம முடிச்சுகள்
இப்படி அடுத்தடுத்த மரணங்களால், கோடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விழுந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கைதாகி ஜாமினில் வெளிவந்த சயான், மனோஜ் ஆகியோர், 2019ல், டில்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், 'கோடநாடு கொலை, கொள்ளையில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது' என குற்றம் சாட்டினர். இது, மேலும் மர்மத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு குறித்து, தற்போது கோவையில் உள்ள, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் ஆறு மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
வீடியோ பதிவு
முன்னதாக, சசிகலாவின் உறவினர் விவேக், கோடநாடு பங்களாவின் மேலாளர் நடராஜன் ஆகியோரிடமும் விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உறவினர் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவிடம், ஐ.ஜி., சுதாகர் தலைமையில், நீலகிரி எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், இன்று விசாரணை நடத்தினர். விசாரணை மாலை வரை நடந்தது. அதற்காக, 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தயாரித்திருந்தனர்.
வரும் 24ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், எட்டு பேர் ஜாமினில் வந்துள்ளனர். சயான், மனோஜ் மற்றும் கனகராஜ் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை, இம்மாதம் 24ம் தேதியுடன், ஐந்து ஆண்டுகளை கடக்கும் நிலையில் உள்ளது.
ஆறுமுக சாமி கமிசனால் ஒரு தீர்வும் வராது.. மக்களின் பணம் தண்டம் ஆறுமுக சாமிக்கு பொழுது போகிறது திருடர்கள் அதிமுகவை கலாய்கிறார்கள்