தினமலர் மூத்த பங்குதாரர் டாக்டர் வெங்கடபதி காலமானார்

தினமலர் நிறுவனர் திரு. ராமசுப்பையரின் 5 மகன்களில் மூத்த மகனான
இவர் கன்னியாகுமரி மாவட்டம் தழுவிய மகாதேவர் கோயில் என்ற கிராமத்தில் பிறந்தார். நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்ததும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எஸ்சி., படித்தார். தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் முடித்தார். அதே காலக்கட்டத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் அங்கு படித்தார். பின்னர் வாரங்கல்லில் உள்ள ரிஜினல் எஞ்சினியரிங் கல்லூரியில் ( ஆர்.இ.சி) உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.

அமெரிக்காவில் பட்டம் பெற்றார்
அடுத்து 1956ல் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் எஞ்சிஜினியரிங்கில் மாஸ்டர் டிகிரி முடித்தார். அதை முடித்ததும் போயிங் கம்பெனியில் டிசைனிங் துறையில் சிறிது காலம் பணியாற்றினார். மேற்கொண்டு பி.எச்டி., செய்ய நினைத்த அவருக்கு அமெரிக்காவில் அதற்குரிய பேராசிரியர் இல்லாததால். ஜெர்மனி சென்றார். அங்கு ஹானோவர் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள வழக்கப்படி ஓராண்டு ஜெர்மனி மொழி கற்றபின்,ஸ்ட்ரக்சரல் எஞ்சிஜினியரிங்கில் பிஎச்டி., முடித்து சில ஆண்டுகள் ஒரு எஞ்சினியரிங் நிறுவனத்தில் பணி புரிந்தார்.
அந்த நிறுவனம் வளைகுடா பகுதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அங்கும் சில காலம் பணி புரிந்தார். தமிழகத்தில் எண்ணூர் மற்றும் மேட்டூரில் பவுண்டேஷன் நிறுவனம் அமைத்திருந்த பவர் பிளான்ட்டுகளில் கன்சல்ட்டிங் டிசைனிங் எஞ்சினியராக பணியாற்றினார்.
1970களில் திருச்சி பிஎச்இஎல்., லில் கன்சல்டிங் டிசைனிங் எஞ்சினீயராக இருந்தார். 1972- 73ல் தினமலர் பங்குதாரர் ஆனார், இவருக்கு 3 மகள்கள் பேரன், பேத்திகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த 1997 ல் காலமானார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த வெங்கடபதி இன்று காலை 07-20 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காலமானார்.
இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டையில் அவரது உடல் தகனம் நடந்தது..
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தினமலர் மூத்த பங்குதாரர் டாக்டர். வெங்கடபதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்: தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாளர் திரு.வெங்கடபதி மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (51)
அன்பானவர் பழக இனியவர் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்
May his soul rest in peace
தினமலர் பங்குதாரர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஆழ்ந்த இரங்கல்கள் .அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய எம் பிரார்த்தனைகள் .
May his soul rest in peace 🙏