dinamalar telegram
Advertisement

சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும்

Share
சென்னப்பநாயக்கன் பட்டினம்தான் சென்னைப்பட்டினமாக திரிந்தது; ஆங்கிலேயர்கள் வந்தபிறகே, சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தோன்றின. சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தனித்தனியே இருந்து, குடியிருப்புகள் அதிகரித்தபின் ஒரே நகரமாக, நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினம் என மாற்றப்பட்டது.
இதுபோன்ற ஏராளமான தகவல்கள் சென்னையைப் பற்றியும், மெட்ராஸ் எனப்படும் மதராசப்பட்டினத்தைப் பற்றியும் உலவி வருகின்றன. ஆங்கிலேயரே மதராசப்பட்டினத்தை தோற்றுவித்ததாகவே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், "மதராசப்பட்டினமும், சென்னைப்பட்டினமும் ஏற்கனவே இருந்தவைதான். இரண்டுமே தனித்தனி குடியிருப்புகள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே இவ்விரு குடியிருப்புகளும் இருந்தன என்ற கருத்தை ஆய்வாளர் நரசய்யா வலுவான ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.
"மதராசப்பட்டினம்' நூலில், ஆசிரியர் <உரையில் மதராசப்பட்டினம் என்ற நூலின் தலைப்புக்கான காரணத்தை விளக்கும் போது, இதுதொடர்பாக பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கிறார் நரசய்யா. அந்த ஆதாரங்களின் படி, இரு பட்டினங்களுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்தன என்பது உறுதியாகிறது.
அந்நூலிலிருந்து....
இவ்வூரின் பெயரை சென்னை என மாற்றியபோது கூட பல சரித்திர ஆசிரியர்கள் அதை எதிர்த்தனர். சரித்திரத்தில் பல விஷயங்கள் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டாலும், எத்தனையோ விஷயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் புதையுண்டு கிடக்கின்றன. எனவே, எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது.
ஐரோப்பிய குறிப்புகளின் படி, கரையோரத்தில் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்று இரண்டு ஊர்கள் இருந்தன எனத் தெரிகிறது. சிலர் கூற்றுகள் படி, தாமரல ஐயப்பா(தாமரல குடும்பத்தாரிடம் இருந்துதான் ஆங்கிலேயர்கள் நிலம் வாங்கி கோட்டை கட்டினர்) ஆங்கிலேயர்களை தன் தந்தையின் நினைவாகச் சென்னபட்டினம் என பெயரிட வேண்டிக் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுவதற்கு, ஆதாரப்பூர்வமான குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.
1658லிருந்து 1662 வரை ஏஜென்டாக இருந்த சேம்பர்ஸ் என்பவர் குறிப்பு இதற்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அக்குறிப்பில், "நாங்கள் ஆர்மகானில் இருந்த போது, தாமரல ஜப நாயுடு, டே என்பவருக்கு எழுதியதில், தனது தந்தை சென்னப்ப நாயுடு பெயரில் ஓர் ஊரை உண்டாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது' என்று உள்ளது.
ஆனால், இதைக்குறித்து எந்த இடத்திலும் கோட்டையை நிறுவிய டே என்பவராலோ, கோகனாலோ சொல்லப்படவில்லை. இதை எவ்வளவு தூரம் நம்ப முடியும் என்றும் தெரியவில்லை' என்று "மதராசப்பட்டின நிறுவனம்' நூலாசிரியர் ராமசுவாமி கூறுகிறார்.
"ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் அல்லது சென்னகுப்பம் என்ற இடத்தில் குடியேறியதும், அங்கே அவர்கள் நிலைநாட்டிக் கொண்டதும் ஒரு சரித்திரக் குறிப்பு-ஒரு மராத்தா கட்டுரை மொழிபெயர்ப்பு சி.வி.போரியா' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒரு கோட்டையைக் கட்ட முனைந்த ஆங்கிலேயர்கள், தாமரல குடும்பத்தினரை அணுகினர். போலிகர்கள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட பாளையக்காரர்கள், அவர்களுக்கு நான்கு கிராமங்களைக் கொடுத்தனர். அவை முறையே மதராசக்குப்பம்(இதைத்தான் அவர்கள் பின்னர் மதராஸ் என்றழைத்தனர்), சென்னைக் குப்பம், ஆர்க்குப்பம், மாலேபட் என்பன'
இந்த விவரங்களில் இருந்து மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற தனித்தனி இடங்கள் கிராமங்களாகப் பழங்காலத்திலேயே இருந்திருக்கின்றன என அறிய முடிகிறது.
1639 செப்., 5ம் தேதியிடப்பட்ட மசூலிப்பட்டினத்துக் குறிப்பு ஒன்றில், "மதராசபட்டம் ஒரு துறைமுகப்பட்டினம் என்றும், அது புலிக்காட்டுக்கும், சாந்தோமிற்கும் இடையில் இருப்பதாகவும்' தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மசூலிப்பட்டினத்து ஆங்கிலேயர்கள் சூரத்திற்கு அக்., 25, 1639ம் நாளில் எழுதிய கடிதத்தில், "மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட்தோமுக்கு அருகில்' இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பெனியின் ஆங்கிலேயக்குறிப்புகளில் இதனை மிகப்பழைமையான ஒன்றாக இதைக் கருதலாம்.
எனவே, 1640க்கு முன்னரே மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களும் இருந்திருக்கின்றன என்று தெளிவாகிறது. காலத்தால் மதராசப்பட்டினம் என்ற ஊர் சென்னப்பட்டினத்திற்கு முன்னரே இருந்தது; இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நேர்மையாகவும், சரித்திர நோக்கிலும் சென்னையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல், டால்பாய்ஸ் வீலர் எழுதிய "மெட்ராஸ் இன் ஓல்டன் டைம்ஸ்' ஆகும். ஹென்றி டேவிசன் லவ் எழுதிய "வெஸ்டிஜஸ் ஆப் ஓல்ட் மெட்ராஸ்' நூலும் சிறந்த ஒன்று. இந்த இரு நூல்களிலும், மெக்ளீன் எழுதி மேலாண்மை குறித்த நூலிலும், தற்போதைய சென்னை மதராசப்பட்டினம் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் வாய்வழியாக இப்பகுதி மக்களால் சென்னை என்று வழங்கப்பட்டு வந்தது. மதராசப்பட்டினம் என்ற பெயர் வந்ததற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும், வரலாற்று ரீதியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.
கன்னிமரா நூல்நிலையத்தில் துணை நூலகராகப் பணியாற்றிய சுவாமிநாதன் எழுதிய நூலில், "கி.பி., 1645ம் ஆண்டு சந்திரகிரி மகாராஜாவாக இருந்த ஸ்ரீரங்கநாயர், இப்பகுதிக்கு தனது பெயராக ஸ்ரீரங்கராயபட்டினம் என்று பெயர் சூட்டினார். ஆனால், இப்பெயரை அவரைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மதராசப்பட்டினம் என்ற பெயர் கொண்ட ஊர், ஆங்கிலேயர் வருகைக்கு சற்று முன்னரே அறியப்பட்டிருந்தது. இவ்விடத்தின் முக்கியப் பகுதிகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி என்பதும் தெளிவாக உள்ளது.
இவ்வாறு, நரசய்யா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இருவிஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. முதலாவது சென்னப்பட்டனமும், மதராசப்பட்டனமும் வேறுவேறு ஊர்கள்; இ ரண்டுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்திருக்கின்றன. இரண்டாவது இவ்வூரின் பெயர்க்காரணங்களாகச் சொல்லப்படுபவைக்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement