உள்ளாட்சி தேர்தலால் உற்சாகம்... கோவையில் பணம் கரை புரளும்!
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால், கோவையிலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்; அதிலும் ஜெயித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஆளும்கட்சி இருப்பதால், இந்தத் தேர்தலில் பணம் கரை புரளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில், சட்டசபையில் அனைத்துத் தொகுதிகளையும் இழந்த நிலையில் இருக்கும் ஆளும்கட்சி, இந்த முறை எப்படியாவது கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று, அதிதீவிரமாக இருக்கிறது. ஆனால் பொங்கல் தொகுப்பு பொருட்களால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கோபம், கடந்த ஆண்டு போல ரொக்கம் கொடுக்காதது, நகருக்குள் ரோடுகள் படு மோசமாக இருப்பது போன்ற காரணங்களால், ஆளும்கட்சியின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
கடந்த பத்தாண்டுகளாக, தி.மு.க.,வினர் சம்பாதிக்க வழியில்லாததால், தேர்தலுக்குச் செலவழிக்க பணமின்றித் தவிக்கின்றனர்.சமீபத்தில் நடந்த டாஸ்மாக் 'பார்' ஏலத்திலும், ஆளும்கட்சியினருக்கு வாய்ப்பு தரப்படாததால், அவர்களும் கடும் விரக்தியில் உள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, அ.தி.மு.க.,வினர் செல்வத்தோடும், மக்களிடம் பெரும் செல்வாக்கோடும் வலம் வருகின்றனர்.இப்போதும் வசதி படைத்தவர்களுக்கே வாய்ப்பு தரப்படுவதால், அவர்களும் பணத்தை வாரியிறைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதனால், அவர்களை எப்படி எதிர்கொண்டு ஜெயிப்பது என்ற தயக்கமும், கலக்கமும் ஆளும்கட்சியினரிடம் காணப்படுகிறது.

இந்த காரணங்களால், தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு தரப்பிலும் பணம் தண்ணீராய்ச் செலவழிக்கப்படும் என்றும், அடுத்த ஒரு மாதத்துக்கு கோவையில் பணம் கரை புரளுமென்றும் அரசியல் கட்சியினர் படு உற்சாகமாக உள்ளனர். அதே நேரத்தில், இவ்விரு கட்சிகளின் கூட்டணிக் கட்சியினரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
எப்படியும் மேயர் பதவியைக் கைப்பற்ற வேண்டுமெனில், பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டுமென்பதால், கூட்டணிக் கட்சியினருக்கும், இவ்விரு முக்கியக் கட்சிகளின் சார்பில் செலவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில், இந்தத் தேர்தலின் வெற்றியை கூட்டணி பலம், வேட்பாளர் செல்வாக்கை விட பணமே தீர்மானிக்குமென்பது உறுதியாகத் தெரிகிறது.
-நமது நிருபர்-
வாசகர் கருத்து (2)
எலிக்கு ஒரு காலம் வந்தால் அணிலுக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள். கால சக்ரம் சுழன்றுக்கொண்டேதான் இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேயர் வேட்பாளர் தேர்தலில் அதிமுகவில் யாரும் ஏற்க தயாராக வில்லை என்ற செய்திகள் தான் அதிகம்.