dinamalar telegram
Advertisement

வாழ்நாளில் கடைசி வரை சிரிக்கவைத்தவர்...

Share
Tamil News
சென்னை திநகரில் உள்ள நகைச்சுவை மன்றத்தின் மாதந்திர கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார் என்றால் கூட்டத்திற்கே தனிக்களை வந்துவிடும்.
89 வயது என்றால் யாராலும் நம்பமுடியாது,மிடுக்கான உடையோடு பளிச்சென்ற முகத்துடன் அவர் மேடையை நோக்கி வர ஆரம்பித்தார் என்றால் மொத்த சபையும் வாய்விட்டு சிரிக்க தயராகிவிடும்.
அவரும் ஓரு நாளும் சபையை ஏமாற்றியது இல்லை, இத்தனைக்கும் அவர் எந்த குறிப்பும் வைத்துக் கொள்ளமாட்டார், அன்றைக்கு காலையில் என்ன செய்தி படித்தாரோ அல்லது அவருக்கு அன்று என்ன அனுபவம் ஏற்பட்டதோ அதன் அடிப்படையில் அவர் சொல்லும் நகைச்சுவையே தனி.
உதாரணத்திற்கு அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இது
சென்னைக்கு பக்கத்தில் நீச்சல் குளம் உள்ளீட்ட பதினாறு வித வசதிகளுடன் மலிவு விலையில் வீடு என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டு போன் செய்தேன், குறிப்பிட்ட இடத்திற்கு செக்புக்கோடு வரச்சொன்னார்கள் நானும் செக்புக்கில் எழுதிக்கொடுத்துவிட்டு மறுநாளே கிரகப்பிரவேசம் செஞ்சு வீட்டிற்கு குடிபோகலாம் என்று சென்றேன்.
என்னைப் போல இன்னும் சிலரை ஏற்றிக் கொண்ட அந்த வேன் போய்க்கொண்டே இருந்தது, சென்னை ரொம்பத்தான் இப்ப நீண்டுவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன் ஒரு இடத்தில் வண்டி நின்றது அப்படா வீடு வந்துவிட்டது என்று நினைத்து இறங்கினால் ஒரு டீகடைதான் இருந்தது டீ சாப்பிட்டு போலாம் சார் என்றனர்
டீ சாப்பிட்டுவிட்டு திரும்ப வண்டியை எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருந்தனர் கடைசியில் ஒரு இடத்தில் நிறுத்தினர் அங்கே ஒரு விக்ரவாண்டி என்று ஒரு பெயர்ப்பலகை இருந்தது இது விழுப்புரம் பக்கத்திலே இல்ல இருக்கு என்று சந்தேகத்துடன் அழைத்து போனவரைக் கேட்டேன்
நீங்க ஏன் அங்கிட்டு இருந்து பெயர்ப்பலகையை படிக்கிறீங்க இந்தப்பக்கம் வந்து பாருங்க என்றனர் அந்தப்பக்கம் போய்ப்பார்த்தால் சென்னை 160 கிலோமீட்டர் என்று இருந்தது, பார்த்தீங்களா இப்ப சென்னைக்கு பக்கத்திலதானே இருக்கோம் என்று கூறிவிட்டு ஒரு வயல்காட்டிற்குள் அழைத்துப் போய் அத்துவானக்காட்டில் நிறுத்தினர்.
அந்த வெயிலிலும் கோட் அணிந்த ஆசாமி ஒருவர் வந்து நின்று, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க நாளையில இருந்து இந்த இடத்தோட விலை டபுளாகுது என்றார். எல்லாம் சரி வீடு எங்கே என்று கேட்ட போது நீங்க நிக்கிற இடம்தான் நீச்சல்குளம் பார்த்து தண்ணிக்குள்ள விழுந்துராதீங்க, இந்த பக்கம் பார்த்தீங்களா? பள்ளிக்கூடம்! அந்தப்பக்கம் பார்த்தீங்களா? அழகான பூங்கா! என்று சொல்லிக்கொண்டே போனார்
வெயில்ல லுாசாயிட்டாரோ? என்ற சந்தேகத்துடன் எங்க கண்ணுக்கு எதுவும் தெரியலீங்களே என்ற போது அதெல்லாம் இங்க வரப்போகுதுன்னு சொல்ல வந்தேன் ,அடுத்து நீங்க வரும்போது எல்லாம் இருக்கும் என்றவர் ஆமாம் உங்க ‛செக்புக்' எங்கே என்று கேட்டார்.
இன்னைக்கு நாள் நல்லாயில்லை என்னை நல்லபடியா வீட்டுல கொண்டு போய்விடு நாளைக்கு செக்புக் தர்ரேன் என்று சொல்லிவிட்டு வந்தவன்தான் அதற்கு பிறகு சென்னைக்கு பக்கத்திலே என்ற விளம்பரத்தைப் பார்த்தாலே வேர்த்து விறுத்து விறுத்துப் போவேன் என்றார்.
அருமையான பாடி லாங்வேஜ் உடன் அவர் சொன்னதைக் கேட்டு சபையோ சிரி சிரியென்று சிரித்தது
அவர்தான் அம்பத்துார் நாகேஷ் என்றழைக்கப்படும் நாராயணன்.இந்த 89 வயது இளைஞர் அரசு அதிகாரியாக இருந்த போது மனநலம் பாதித்த குழந்தைகள் நலனிற்காக பலவித நல்ல காரியங்களைச் செய்து விருதுகள் பெற்றிருக்கிறார்.
சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் ஒய்வுக்கு பிறக நகைச்சுவை மன்றங்களில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை சிறப்புற செய்துவந்தார்.
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற நாராயணன் தனக்கு நேரிட்ட ‛நாள்பலன்' பற்றி சொன்னாலும் சரி,தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் பேசினாலும் சரி யாராலும் சிரிக்காமல் இருக்கமுடியாது.
‛தண்ணி போட்டாதான்' நமக்கு பேச்சே வரும் என்று குடிக்க தண்ணீர் வேண்டும் என்பதைக்கூட மேடையில் நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்.அவரைப் பொறுத்தவரை எல்லா விஷயமும் நகைச்சுவைதான் எவ்வளவு சீரியஸ் விஷயமாக இருந்தாலும் அதை தமாஷாக்கிவிடுவார்.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக யாரையும் சந்திக்க முடியல, எல்லாம் சரியாகிவிடும் சீக்கிரம் சந்திப்போம் நீ மட்டும் அப்பப்ப போன் செய்து நான் இருக்கேனான்னு ‛கன்பர்ம்' பண்ணிக்கய்யா என்பார் வெடிச்சிரிப்புடன்.கடந்த 27 ந்தேதி அவருக்கு போன் செய்த போது,போனை அவரது மகன் முரளிதரன்தான் எடுத்தார், கடந்த சில நாளாக உடல் நலமில்லாமல் இருந்த தன் தந்தை திடீரென நேற்று முன் தினம் இறந்துவிட்டார் என்றார், குரலில் தந்தையை இழந்த சோகம் வெளிப்பட்டது.
சோகம் அவருக்கு மட்டுமல்ல நல்லதொரு நகைச்சுவை மனிதரை இழந்துவிட்டோமே என்பதால் எனக்கும்தான்..

-எல்.முருகராஜ்
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

  இதுக்கு சிரிக்கிறவங்க எல்லாம் மயிலாப்பூர் நங்கநல்லூர் ஆசாமிகளா

 • Chandrasekaran - al khobar,சவுதி அரேபியா

  ஓம் ஷாந்தி

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தினமலருக்கு கலைஞர்கள் , அதுவும் மூத்த குடிமகன்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் . குறிப்பாக நமது திநகர் நகைசுவை மன்றத்தின் சார்பாக எல்லா கலைஞர்களையும் ஊக்குவித்து பாராட்டவைத்து அழகு பார்த்தது தினமலர், இதற்க்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை, திரு அம்பத்தூர் நாராயணன் ஐயா அவர்களைப்பற்றி இங்கு கண்டிப்பாக கூறவேண்டும், காணம் வாய் திறந்தாலே சிர்க்கவைத்துக்கொண்டே இருப்பார், அப்படி ஒரு மிகசிறந்த ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞர் . இவர் சதா சொல்லிக்கொண்டு வந்தது சாதாரணமா மூத்த குடிமகன் என்றாலே யாருமே மதிக்கமாட்டார்கள் அதுவும் குடும்பத்தில் கேட்கவே வேண்டாம். அப்படி இருக்க என்னையும் ஒரு மனிதனாக மதித்து தினமலரில் அவ்வப்போது என் புகைப்படத்துடன் செய்தியை போட்டு, சிறுவர் மலரிலும் என்னைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றால் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று கூறுவார், மேலும் இவரது புகைப்படத்துடன் கூடிய செய்தியை பிரதி எடுத்து கையிலேயே வைத்திருப்பார் எல்லோரிடமும் காட்டிக்கொண்டே இருப்பர், வாசகர்களுக்கு ஒரு செய்தி ஆனால் அந்த செய்திக்கு உரியவர்களுக்கு அது வாழ்நாள் பொக்கிஷம் என்பதை திரு அம்பத்தூர் நாராயணன் ஐயா போன்றவர்களிடம் காணலாம், எல்லாவற்றையும் விட மிக மிக முக்க்கியமான செய்தி என்னவென்றால் அந்த மகானுக்கு புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு, மேலும் அஞ்சலி செலுத்தியது கண்டு நாங்கள் அனைவரும் கண்கலங்கி நிற்கிறோம், தாமதமாக செய்தி கிடைத்தாலும் அதை எல்லா வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டதற்கு என்றென்றும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம், திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு இருகரம் கூப்பி சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், வந்தே மாதரம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஐயா தங்களுக்கு நாங்கள் எப்படி கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை, மூத்த குடிமக்கள் என்றாலே எந்த ஒரு அங்கீகாரமும் அவரவர்கள் குடும்பத்திலேயே இருக்காது அப்படி இருக்க தகுதியும் திறமையும் இருக்கும் ஒருவருக்கு தினமலர் மிகப்பெரிய புகழாரம் மற்றும் அஞ்சலி செலுத்தியது கலைஞர்கள் உலகத்துக்கே மிகப் பெருமையாக இருக்கிறது, அதிலும் திநகர் நகைசுவை மன்றத்தின் சார்பாக நாங்கள் என்றால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், திரு நாயராயன் ஐயா எப்போதும் தினமலரில் அவரைப்பற்றி வந்த செய்திகள் மற்றும் சிறுவர் மலரில் அவரரைப்பற்றி வந்த செய்தித்தாள்களை கையிலேயே வைத்துக்கொண்டு இருப்பார், எல்லோரிடத்திலும் இந்த செய்தியை நீங்கள் பார்த்தீர்களா ? என்று காண்பித்து ஆனந்தம் அடைவார் மேலும் இந்த வயதில் நமக்கு தினமலர் ஒன்றுமட்டும்தான் அங்கீகாரம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது, வேற ஒரு பய நம்மை திரும்பிக்கூட பார்க்க தயங்குகிறார்கள் என்று கூறுவார், அப்படி தினம் தினம் தினமலருடன் வாழ்ந்து வரும் பல தகுதியும் திறமையம் வாய்ந்த மூத்த குடிமக்களுக்கு ஒரு ஏணிப்படியாக இருந்து அவ்வப்போது அவர்களை இளைஞர்களாக்கி மகிழ்வித்து அங்கீகாரம் கொடுத்து வரும் தினமலருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம், ஒருபுறம் திரு நாராயண் ஐயாவை இழந்து வாடும் எங்களுக்கு மறுபுறம் இப்படி ஒரு புகழாரம் கொடுத்து அஞ்சலி செய்தது கலைஉலகுக்கே தாங்கள் செய்த ஒரு பெரிய தியாகம், இருகரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம், வந்தே மாதரம்

Advertisement