dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணி...மும்முரம்; ஜனநாயக முறைப்படி நடக்கும்: கலெக்டர் தகவல்

Share
Tamil News
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில், 210 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையிலும், ஜனநாயக முறைப்படியும் நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கோட்டக்குப்பம் உள்ளிட்ட 3 நகராட்சிகளுக்கும் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லுார், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லுார், வளவனுார் மற்றும் விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர்களும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்களும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர்களும், அனந்தபுரம் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களும், அரகண்டநல்லுாரில் 12, செஞ்சியில் 18, மரக்காணத்தில் 18, திருவெண்ணெய்நல்லுார், வளவனுார், மற்றும் விக்கிரவாண்டியில் தலா 15 என மொத்தம் 210 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இத்தேர்தலுக்காக 348 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், இத்தேர்தலில், 1,42,022 ஆண் வாக்காளர்களும், 1,51,109 பெண் வாக்காளர்களும் 55 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,93,186 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் வாயிலாகவும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாகவும் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் கண்காணிக்கப்பட உள்ளது.நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தனித்தனியாக ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இன்று 28ம் தேதி வேட்பு மனுதாக்கல் நடைபெற உள்ளதால் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அறை மற்றும் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேட்பு மனுதாக்கல் நேர்மையான முறையில் நடைபெறுவதை மாவட்ட தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் நர்சரி பிரைமரி தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தேர் பிள்ளையார் கோவில் தெருவில் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஓட்டுச்சாவடி மையங்களில், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று ஓட்டளிக்க சாய்வுதள வசதி, சக்கர நாற்காலிகள், தடையில்லா மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.வாக்காளர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு ஷாமியானா பந்தல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேர்மையான முறையிலும், ஜனநாயக முறைப்படியும் நடைபெற அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, தாசில்தார் ஆனந்தகுமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement