'காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்ட 23 பேர், 2020ம் ஆண்டு கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிதம் எழுதிய தலைவர்களுக்கு கட்சி எம்.பி., ராகுல் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின் 23 தலைவர்களும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்த நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு எம்.பி.,யாக காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.

கபில் சிபல் கூறுகையில்,''பத்ம பூஷண் விருது பெறும் குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்துகள்;அவரது பணிகளை காங்கிரஸ் மதிக்கவில்லை; நாடு அங்கீகரித்துள்ளது,'' என்றார்.
ஆனந்த் சர்மா கூறுகையில், ''குலாம் நபி ஆசாத்தின் பல ஆண்டுகால பொது சேவைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது,'' என்றார்.
சசி தரூர் கூறுகையில், ''குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்துகள். ஒருவரது பொதுச் சேவையை மாற்று கட்சி அரசு மதித்து அங்கீகரித்துள்ளது சிறப்பு,'' என்றார்.
அதே நேரத்தில் விருதை ஆசாத் ஏற்பதற்கு காங்கிரசில் எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், பத்ம பூஷண் விருது பெறுவோரில் இடம் பெற்றுள்ளார். ஆனால் விருதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து, காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:புத்ததேவ் சரியான காரியத்தை செய்துள்ளார். அவர் 'ஆசாத்' ஆக இருக்க விரும்புகிறார். 'குலாம்' ஆக இருக்க விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்தியில் 'ஆசாத்' என்றால் விடுதலை, குலாம் என்றால் அடிமை என அர்த்தம். பத்ம பூஷண் விருதை ஏற்கும் குலாம் நபி ஆசாத்தை விமர்சிக்கும் நோக்கில் ஜெய்ராம் ரமேஷ் இப்படி கூறியுள்ளது, காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசலை அதிகரித்துள்ளது.
இதனிடையே குலாம் நபி ஆசாத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: என் சமூக வலைதள கணக்கில் உள்ள புகைப்படத்தையும், அதில் உள்ள சில தகவல்களையும் நான் மாற்றி விட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. நான் கட்சி தாவப் போவதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். நான் எந்த புகைப்படத்தையும் மாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆசாத் காங்கிரஸ் உருவாக நல்ல தருணம்