போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளின் ஓரங்களில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான விளம்பர பேனர்களால், தொடர் விபத்துகள் ஏற்பட்டன; பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து, சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை அருகே, துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 2019 செப்டம்பர் 12ம் தேதி, கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ விபத்தில் சிக்கினார். பின்னால் வந்த லாரி, சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியதில், அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, மாநகநகரின் எந்த பகுதியிலும், விளம்பர பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. அதே போல், விளம்பர பேனர்களுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
எனினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில், அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதும் தொடர் கதையாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பிரதான சாலைகளின் ஓரங்களின் தனியார் நிறுவனங்களின் சார்பில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக, நம் நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. நம் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, அண்ணா சாலை உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விளம்பர பேனர்களை அகற்ற, அந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, ரேடியல் சாலையில் முளைத்துள்ள விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டால், இதே போல், மாநகரின் பிற பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் மீண்டும் தலை துாக்கும் அபாயம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருப்பதால், மற்ற பணிகளை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியே, விளம்பர பலகைகள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே மறைமுக காரணமாக உள்ளனர்.சுபஸ்ரீ மரணத்தின் போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில், அரசாங்கத்தின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என கடுமையாக சாடினார்.
தற்போது அதே ஸ்டாலின் முதல்வராக உள்ள நிலையில், தி.மு.க., ஆட்சியில் பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. புற்றீசலாக முளைத்துள்ள ராட்சத பேனர் கலாசாரத்தால், மீண்டும் உயிர் பலி நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரிகள் தவறும்பட்சத்தில், முதல்வரே நேரடி கவனம் செலுத்தி, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் -
பேனர் வைக்க மாட்டோம், கொடிக்கம்பம் நடமாட்டோம், என்றெல்லாம் சத்தியம் செய்த கூட்டம் இன்று எங்கே போனது? எனக்கு வாக்களித்தால் தமிழ்நாடு சொர்க்கமாகும் என்ற சீமான், நல்லாட்ச்சி வழங்கியதாக தம்பட்டம் அடித்த இ/ஓ பி.எஸ் கள் எங்கு போனார்கள்?