உடுமலை-கொளுத்தும் வெயிலிலும், சில்லென்று தண்ணீர் கொட்டும் பஞ்சலிங்க அருவியில், நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.திருமூர்த்தி அணை, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவி, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது. பிரசித்தி பெற்ற, இந்த சுற்றுலா மையம், கொரோனா ஊரடங்கு உட்பட காரணங்களால், பயணிகள் வருகையின்றி, களையிழந்து காணப்பட்டது.வடகிழக்கு பருவமழை சீசனில், பஞ்சலிங்க அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.பொங்கல் விடுமுறையின் போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், அருவி வெறிச்சோடியே காணப்பட்டது.இந்நிலையில், நீர் வரத்து சீராகி, ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டதால், பஞ்சலிங்க அருவிக்குச்செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, குடியரசு தின விடுமுறையையொட்டி, நேற்று பஞ்சலிங்க அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.கொளுத்தும் வெயிலிலும், சில்லென்று கொட்டிய தண்ணீரில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பருவமழைக்கு பிறகு, மேற்குத்தொடர்ச்சி மலையும், பசுமை போர்வை போர்த்தியது போல, பசுமையாக மாறியுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் உற்சாகமும் கூடுதலானது.
பஞ்சலிங்க அருவியில் சில்லுன்னு குளியல் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!