dinamalar telegram
Advertisement

மேயர் தேர்தலில் ஒதுங்கிய அ.தி.மு.க., புள்ளிகள்!

Share
Tamil News

மேயர் தேர்தலில் ஒதுங்கிய அ.தி.மு.க., புள்ளிகள்!''உளவுத்துறை அறிக்கையால, முடிவுல பின்வாங்கிட்டாங்க வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யார், எந்தப் போட்டியில இருந்து விலகினது ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''வேலுார் மாநகராட்சி மேயர் பதவியை, முன்னாடி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கியிருந்தாவ... இப்ப, பெண்கள் பொது பிரிவுக்கு மாத்திட்டாவ வே...

''இதனால, தி.மு.க., நிர்வாகிகள், தங்களது வீட்டம்மாக்களுக்கு சீட் வாங்க முயற்சி செஞ்சாவ... திடீர்னு, அமைச்சர் துரைமுருகனின் மருமகள் சங்கீதா மேயர் பதவிக்கு நிற்க போறதா தகவல் கிடைச்சது வே...

''அப்பா அமைச்சர், மகன் எம்.பி., இப்ப மருமகளுக்கும் பதவியான்னு, கட்சிக்குள்ள முணுமுணுப்பு இருக்கு... அதனால, தேர்தல்ல நின்னாலும், எதிர்க்கட்சியினரே தேவையில்லை, சொந்த கட்சியினரே சூது பண்ணி தோற்கடிச்சிடுவாங்கன்னு, உளவுத்துறை தகவல்கள் போயிருக்கு... இதனால, மேயர் கனவை சங்கீதா மறந்துட்டாங்க வே...'' என்றார்
அண்ணாச்சி.

''மானாவாரியா மண்ணை கடத்திட்டு இருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை மாவட்டம், அன்னுார் வட்டாரத்துல, மண் கடத்தல் அமோகமா நடந்துட்டு இருக்கு... இது பத்தி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிச்சாலும், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க பா...

''அந்தப் பகுதியில இருக்கிற 'ஆனந்த'மான ஆளுங்கட்சி புள்ளியின் ஆசியோட தான் மண் கடத்தல் நடக்கிறதால, அதிகாரிகள் அமைதியா இருக்காங்க... தினமும், பல லோடு மண்ணை கடத்திட்டு போறதை, போலீசாரும் கண்டுக்காம இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தேர்தல்ல ஆர்வமே காட்ட மாட்டேங்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சொல்றீரா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆமாம்... மதுரை மாநகராட்சியில 100 வார்டுகள் இருக்குது... இதுல, கவுன்சிலருக்கு போட்டியிட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சார்புல விருப்ப மனுக்கள் வாங்கியிருக்காங்க...

''அ.தி.மு.க., சார்புல பலரும் போட்டி போட்டு, மனுக்களை குடுத்தாங்க... ஆனா, கடைசி நேரத்துல, மேயர் பதவி பெண்களுக்குன்னு ஒதுக்கீடு பண்ணிட்டதால, பலரும் ஒதுங்கிட்டாங்க...

''முன்னாள் எம்.பி.,யும், சட்டசபை தேர்தல்ல, கிழக்கு தொகுதியில போட்டியிட்டு தோத்து போனவருமான கோபாலகிருஷ்ணன் மனைவியை நிறுத்தலாம்னு, அவரது ஆதரவாளர்கள் சொன்னாங்க...

''ஆனாலும், சொந்த கட்சியினரே நம்மை ஜெயிக்க விட மாட்டாங்கன்னு நினைச்ச கோபாலகிருஷ்ணன், இதுல ஆர்வம் காட்டலை... அதே மாதிரி, இப்ப எம்.எல்.ஏ.,வா இருக்கிற ராஜன் செல்லப்பா, தன் மருமகளை நிறுத்துவார்னு எதிர்பார்த்தாங்க...

''ஆனா, தன் மகன் ராஜ்சத்யனை எம்.பி., தேர்தல்ல நிறுத்தி, பல கோடியை காலி பண்ணிட்டதாலும், சொந்த கட்சியினர் மேலயே நம்பிக்கை இல்லாததாலும், அவரும் ஆர்வம் காட்டலைங்க...

''இதே வரிசையில, ஜெ.,பேரவை செயலர் எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பலரும், மேயர் தேர்தல்ல ஆர்வம் காட்டாம பதுங்கிட்டாங்க... இதனால, ஆளுங்கட்சியான தி.மு.க., கூடுதல் உற்சாகத்துல இருக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பின்னே , தெரிந்தே விளக்குப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவார்களா ? இதுவரை 'அடித்ததை' காப்பாற்றிக்கொண்டானாலே போதும் என்ற நிலையில், போட்டியாவது

  • Gandhi - Chennai,இந்தியா

    மதுரை மக்கள் வைத்துள்ள செல்ல பெயர். "மண்ணு மந்திரி". மதுரை , நத்தம் திண்டுக்கல் பகுதியில் ஒரு மலையை விடமாட்டாரு மனுஷன். பினாமி படைகள் இரவில் ஊர் அடங்கிய பின் வேலையை தொடங்கும் விடியலுக்கு முன் எல்லா மணல் லாரிகளும் வெளியேறிவிடும். ஒரு லோடு ரூபாய் 6500/- அவரிடம் மட்டும் தான் மண்ணு வாங்க முடியும். இயற்கை வள சுரண்டலுக்காகவே சிறப்பு மந்திரி பதவி - கோபாலபுர ஆசிர்வாதம்.

  • ksethuramalingam - Tirupur,இந்தியா

    மண் கடத்தலை ஏன் மீடியா அம்பலப்படுத்துவதில்லை? சென்ட்ரல் கவமென்ட் ஏன் சிபிஐ மூலம் அகசன் எடுப்பதில்லை

Advertisement