நிலையான வருவாய் கொடுக்கும் மிளகு! ஊடுபயிராக பயிரிட பரிந்துரை
உடுமலை:தென்னையில், ஊடுபயிராக மிளகு பயிரிடுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பரப்பு அதிகளவு உள்ளது. தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியின் போது, விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அவ்வகையில், கோகோ, மிளகு உட்பட ஊடுபயிர்கள், தோட்டக்கலை, வேளாண் பல்கலை., யால், பரிந்துரைக்கப்படுகிறது.இது குறித்து அத்துறையினர் கூறியதாவது: நிழல் அதிகமுள்ள தென்னந்தோப்புகளில், மிளகு பயிரிடலாம். இந்தியாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட மிளகு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதில், கரிமுண்டா, கலுவல்லி, பாலன்கோட்டா, மல்லிக்காரா, பன்னியூர், 1, உட்பட கலப்பின ரகங்கள் பரவலாக பராமரிக்கப்படுகிறது.கேரளாவில் இருந்து, 69 சதவீதம் மிளகு இந்தியாவுக்கு கிடைக்கிறது. கேரள விவசாய பல்கலை., பன்னியூரில் உள்ள மிளகு ஆராய்ச்சி நிலையத்தில், உத்திரன் கோட்ட மிளகு வகையும், செரிய களிக்கடன் வகையை ஒட்டு கலப்பினம் செய்து பன்னியூர் ரகங்கள் வெளியிடப்பட்டது.தரம் மற்றும் மகசூல் திறன் உடைய சுபகரா, ஸ்ரீகரா மற்றும் பஞ்சமி ரகங்கள் வெளியிடப்பட்டன. பன்னியூர் ரகங்கள் ஒரு ெஹக்டேருக்கு, 1,200 கிலோ முதல் 2,300 கிலோ வரை மகசூலை தரக்கூடியதாகும்.தோப்புகளில் ஒரு மரத்தின் மீது, 4 மிளகு கொடிகள் வளர்த்து, உயரே வளரச்செய்யலாம். ஏறும் தேவைக்கு ஏணிகளை பயன்படுத்தலாம். ஒரு கொடியில், 200 கிராம் வரை மிளகு பெறலாம்.ஒரு ஏக்கரில், 320 கொடிகள் வளர்த்து, மேலே ஏற்றும் போது, தலா 200 கிராம் விளைச்சல் கிடைத்தால் கூட, 64 கிலோ மிளகு பெறலாம். தேவைப்படும் மிளகு கன்றுகளை நாமே உற்பத்தி செய்யும், தொழில்நுட்பமும் உள்ளது.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!