'பொது நிதியில் இருந்து இவ்வாறு இலவச பொருட்களை அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தை முடக்க வேண்டும்; அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என,
மனுவில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்தாண்டில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.

ரூ.1.82 ஆயிரம் கோடி கடன்
இந்தத் தேர்தல்களின்போது மக்களைக் கவரும் வகையில் பல இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன. தற்போதும் பல கட்சிகள்
அறிவித்து வருகின்றன.இதை எதிர்த்து பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹீமா கோஹ்லி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டதாவது:
அரசியல் சாசனத்தின்படி எந்த ஒரு செலவினத்துக்கும் சட்டசபை அல்லது பார்லிமென்ட் ஒப்புதல் தேவை. அவ்வாறு சட்டமாக அல்லது தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பிறகே செலவிட முடியும்.ஆனால் தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் கட்சிகள் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம்' என, ஒரு கட்சி கூறுகிறது. மற்றொரு கட்சி, 2,000 ரூபாய் தருவதாக
அறிவிக்கிறது.இவ்வாறுதான் தேர்தல்கள் நடக்கின்றன. கடைசியில் இந்த பணம் யாருடையது; மக்களின் பணம். உதாரணத்துக்கு பஞ்சாப் மாநிலத்தை எடுத்தால், அங்கு 1.82 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த இலவச அறிவிப்புகளால் மாநிலத்தின் கடன் மேலும் அதிகமாகும்.
கட்டுப்பாடுகள் இல்லை
இவ்வாறு தேர்தலுக்கு முன் கண்மூடித்தனமாக எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அரசியல் கட்சிகள் மக்களின் வரிப் பணத்தில் இருந்து இலவச பொருட்களை தருவதாக அறிவிக்கின்றன. இது தேர்தல் நடைமுறையின் புனிதத்தை கெடுப்பதாக உள்ளது. மேலும் அனைவருக்கும் தேர்தல் களத்தில் சமவாய்ப்பு கிடைப்பதற்கு எதிராக உள்ளது.வாக்காளர்களை ஈர்ப்பதற்காக தங்களுக்கு ஓட்டு அளிப்பதற்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது ஜனநாயக மதிப்புகளை சீர்குலைப்பதாக அமைகிறது; அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்கும் லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டும்.
இந்த முறையற்ற நடைமுறையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் உரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
சின்னம் முடக்கப்படும்
தேர்தல் சின்னம் தொடர்பான சட்ட விதிகளில் சிறிய திருத்தம் செய்தால் போதும். 'வாக்காளர்களை கவரும் வகையில் அரசின் நிதியில் இருந்து இலவச பொருட்களை வழங்குவதாக எந்த அரசியல் கட்சிகளும் அறிவிக்கக் கூடாது; அவ்வாறு அறிவித்தால் கட்சியின் சின்னம் முடக்கப்படும்' என, சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.அத்துடன் கட்சியின் தேர்தல் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இந்த வாதங்களை ஏற்ற நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில் சில சட்ட ரீதியான கேள்விகள் எழுகின்றன. இதுபோன்ற அறிவுப்புகளை வெளியிடுவதை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி
எழுகிறது.இது மிக முக்கியமான பிரச்னை தான். சில சமயங்களில் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகள், மாநில பட்ஜெட்டைவிட அதிகமாக உள்ளது. ஒரு வழக்கில் இதை உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணையின்போது தேவைப்பட்டால் அரசியல் கட்சிகளையும் ஒரு தரப்பாக சேர்க்கலாம். இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு உடனடியாக தடை விதிக்க முடியாது.
இது ஒரு மோசடி
முதலில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் தன் தரப்பு வாதங்கள் முன் வைக்கட்டும். நான்கு வாரங்களுக்குள் இவை பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.தற்போது நடக்கும் சட்டசபை தேர்தல்களுக்குள் இந்த வழக்கில் முடிவு ஏற்படாது. ஆனாலும் எதிர்கால தேர்தல்களுக்குள் ஒரு வழிமுறையை உருவாக்க முடியும்.அதிக அளவு இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கே தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது ஒரு மோசடியாக, ஊழலாக பார்க்கப்படுவதில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், தேர்தல் ஆணையம் ஒருமுறை ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அது தற்போது பல மடங்காக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது லஞ்சத்துக்கு சமம். அரசியல் கட்சிகளே லஞ்சத்துக்கு வழி வகுக்கின்றன. இதை உடனே தடை செய்ய வேண்டும்.