அபூர்வ சகோதரர்களே.. உங்களுக்கு ஒரு சபாஷ்

புதுடில்லியில் சுசேதா கிருபாளானி அரசு மருத்துவமனையில் ஒரு ஏழைத்தாய்க்கு இரட்டைக்குழந்தை பிறந்தது
ஒட்டிப்பிறந்த இந்த இரட்டைக்குழந்தைகளை பாரமரிக்கவோ வளர்க்கவோ முடியாது என்று நினைத்த பெற்றோர், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அகில இந்திய பிங்கல்வாரா நற்பணி மன்றத்தினர் இந்த இரட்டை குழந்தைகளை தத்தெடுத்து தங்கள் பொறுப்பில் வளர்த்தனர்.சோனா-மோனா இரட்டையர்களும் நம்பிக்கைதரும் மாற்றுத்திறனாளிகளாக வளர்ந்தனர்.அங்குள்ள ஐடிஐயில் எலக்ட்ரீஷியன் படிப்பை முடித்தனர்.
இவர்களைப்பற்றி அறிந்த பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகள் இவர்களை நேரில் பார்த்து இவர்களது பணித்திறனைகண்டு வியந்து அரிதான ஊனமுற்ற நபர்களுக்கான வேலை வாய்ப்பில் கீழ் அவர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளனர்.
19 வயதான இந்த இரட்டையர்கள் இப்போது பஞ்சாப் அரசின் மின் இலாகவில் பணிபுரிகின்றனர், ஆரம்ப சம்பளம் 20 ஆயிரம் ரூபாய், கடந்த டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்து சில நாட்களிலேயே திறமையானவர்கள், வேலைக்கு பொருத்தமானவர் என்று பெயர் பெற்றுள்ளனர்.
தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனாவும் "நாங்கள் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடினமாக உழைப்போம்" என்று மோனாவும் கூறினர்."எங்களை வளர்த்து, தொழில் கல்வி கொடுத்து, சுயசார்புடையவர்களாக மாற உதவிய பிங்கல்வாரா நிறுவனத்திற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
பெற்றவர்களே உதறினாலும் அதுபற்றி கவலையின்றி தங்கள் மீதும் தங்கள் உழைப்பின் மீதும் மட்டுமே கவனம் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் இந்த இரட்டையர்களுக்கு நாமும் வாழ்த்தை கூறுவோம்.
-எல்.முருகராஜ்
வாசகர் கருத்து (2)
இறைவன் கிருபையால் நீடுழி வாழ வேண்டும்......
ஆண்டவன் அருளால் இவர்கள் நீடூடி வாழவேண்டும்...