dinamalar telegram
Advertisement

ஐந்து மாநில தேர்தல்: பா.ஜ.,வுக்கு சவால்

Share
Tamil News
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த மாதம் 10ம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

உ.பி., மாநிலத்தில் மட்டும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதேநேரத்தில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையும் பரவி வருவதால், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் 403, பஞ்சாபில் 117, உத்தரகண்டில் 70, கோவாவில் 40, மணிப்பூரில் 60 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில், பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியில் உள்ளது. பஞ்சாப் மட்டும் காங்கிரஸ் வசம் உள்ளது.இந்த தேர்தல் வாயிலாக வெளியாகும் முடிவுகள், பா.ஜ., - காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும்.

அதிலும், தேசிய கட்சிகளான பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இந்த ஐந்து மாநில தேர்தல், அவற்றின் செல்வாக்கு நிலவரம் அறிய ஒரு பெரிய வாய்ப்பாகும். இந்த ஐந்து மாநிலங்களிலும் தற்போதுள்ள அரசுகள் எல்லாம், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி விட்டன என்ற குற்றச்சாட்டு, பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், அந்த கட்சிக்குள் பல மாதங்களாகவே குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டதால், அவரது தலைமையிலும், மாநில காங்., தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்து தலைமை யிலும், அக்கட்சி தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. பஞ்சாப் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய அரசு விவசாய சட்டத்திருத்த மசோதாக்களை வாபஸ் பெற்றது, காங்கிரசுக்கு சாதகமான அம்சம் என்றாலும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, அகாலிதளம் மற்றும் அமரீந்தர் சிங் - பா.ஜ., கூட்டணி என்று ஓட்டுகள் பிரியும் என்பதால், இம்மாநில தேர்தலில், காங்கிரஸ் வெற்றிக்கனியை பறிக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

-உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ., இரு முறை முதல்வரை மாற்றியது என்பதால், அங்கு சில சவால்களை அந்தக் கட்சி சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல மணிப்பூரிலும், பா.ஜ., உட்கட்சி பிரச்னைகளை சந்திக்கிறது.

குட்டி மாநிலமான கோவாவில், ஐந்து ஆண்டுகளில் மொத்தமுள்ள எம்.எல்.ஏ.,க்களில், ௬௦ சதவீதம் பேர் கட்சி தாவி சாதனை படைத்துள்ளனர். சில தலைவர்கள், 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், ஆளும் கட்சியான பா.ஜ.,வை விட்டும் வெளியேறி உள்ளனர். மேலும், அங்கு திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் களம் இறங்கியிருப்பதால், பா.ஜ., ஆட்சியை பிடிப்பது என்பது, பெரும் சவாலாகவே இருக்கும்.

உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பது நாடே எதிர்பார்க்கும் ஒன்றாகும். கடந்த 35 ஆண்டு கால அம்மாநில வரலாற்றை பார்த்தால், ஒரு முறை ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும், தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியது, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு, பிரதமர் அடிக்கடி இந்த மாநிலத்திற்கு வந்து, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது என, பல சாதகமான அம்சங்கள் உள்ளன.

இருந்தாலும், விவசாய சட்டத் திருத்த மசோதாக் களுக்கு எதிராக, விவசாயிகள் நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தியதை கண்டு கொள்ளாதது, லக்கிம்பூர் துப்பாக்கிச் சூடு சம்பவம், இந்த தேர்தலில் காங்கிரஸ் எடுத்துள்ள புது அவதாரம், அதாவது, அந்தக் கட்சியை சேர்ந்த பிரியங்கா தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி இருப்பது.காங்கிரஸ் வேட்பாளர்களில் 80 சதவீதம் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருப்பது, இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில தலைவர்கள் பா.ஜ.,வில் வெளியேறி இருப்பது போன்ற பாதகமான சில அம்சங்களும் உள்ளன.

அதனால், ஐந்து மாநில தேர்தல் பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சவால்கள் சாதனையாகுமா என்பது, ஓட்டு எண்ணிக்கை நாளன்று தான் தெரியும்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement