dinamalar telegram
Advertisement

மத்திய பட்ஜெட் கைகொடுக்குமா? பின்னலாடை துறை எதிர்பார்ப்பு:கனவுகள் நிஜமாக... காலம், நம் வசமாக!

Share
Tamil News
திருப்பூர்:மத்திய பட்ஜெட் என்றாலே, திருப்பூர் பின்னலாடைத் துறையினருக்கென எதிர்பார்ப்புகள் உண்டு. சாதகமான அம்சங்களும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வகையி லும், பட்ஜெட் அமைந்தால், பின்ன லாடைத்துறையினர் தங்கள் கனவுகளை நிஜமாக்க முடியும்; அதற்கு, காலமும் கைகொடுக்கும்.வரும் பிப். 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. பின்னலாடை தொழிலுக்கு கைகொடுக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவேண்டும் என, திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
தொழில்துறையினர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், பட்டன், ஜிப் உள்ளிட்ட அக்சசரீஸ்களை, ஏற்றுமதி மேம்பாட்டுச் சான்றிதழை பயன்படுத்தி, வரியின்றி இறக்குமதி செய்தன.இறக்குமதி வரியால், நிறுவனங்களுக்கு சுமை அதிகரிக்கிறது. ஏற்றுமதி மேம்பாட்டு சான்றை பயன்படுத்தி, வரியின்றி பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
பஞ்சுக்கு இறக்குமதிவரி வேண்டாமே!
பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஒசைரி நுால் விலை தொடர்ந்து உயர்ந்து, பின்னலாடை உற்பத்தியை பாதிக்கச் செய்கிறது. மத்திய அரசு, இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும். வங்கதேசம் உட்பட போட்டி நாடுகள், நம் நாட்டிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன; இந்திய ஆடை உற்பத்தி துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றன.
பஞ்சு ஏற்றுமதிக்குதடை தேவை
உள்நாட்டில் பஞ்சு விலையை கட்டுப்படுத்தவும், சர்வதேச ஆடை வர்த்தக சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், பஞ்சு ஏற்றுமதிக்கு அதிகபட்ச வரி விதிக்கவேண்டும் அல்லது பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்.சலுகைகளைவிடுவிக்க வேண்டும்கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால், நிறுவனங்களின் நிதி நிலை மோசமடைந்துள்ளது. டியூட்டி டிராபேக், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., உள்ளிட்ட சலுகைகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கச்சா பட்டு மற்றும் பட்டு நுாலுக்கான 15 சதவீத இறக்குமதி வரியை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.
குடியிருப்புகள்ஏற்படுத்த வேண்டும்
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், தொழிலாளர் குடியிருப்பு வசதி ஏற்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும். நிறுவனங்கள், தங்கள் தொழிலாளருக்கு குடியிருப்பு ஏற்படுத்தித்தருவதை ஊக்கப்படுத்தும் வகையில், வருமான வரி விலக்கு அளிக்கவேண்டும்.
பின்னலாடை வாரியம் உருவாகட்டும்
பின்னலாடை துறை சார்ந்த எல்லாவகை பிரச்னைகளையும் எளிதில் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்ற தீர்வுகாண ஏதுவாக, பின்னலாடை வாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடவேண்டும். புதுமையான ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும்வகையில், பின்னலாடை துறைக்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.இவையே திருப்பூர் பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்பாக உள்ளது. பட்ஜெட் எதிர்பார்ப்புகளை, தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • பாமரன் -

    ...🤔🤔

Advertisement