dinamalar telegram
Advertisement

பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தினால், பிரச்னைகளெல்லாம் பஞ்சு போல் பறந்து போகும்!

Share
Tamil News
திருப்பூர்:''ஆடை விலை உயர்வு, உலகளாவிய மக்களின் வாங்கும் திறனை குறைத்துவிடும்; இதனால், ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தினால், பிரச்னைகளெல்லாம், பஞ்சுபோல் பறந்துபோகும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறினார்.

கொரோனாவின் இரண்டு அலைகளால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை கடுமையாக பாதிப்படைந்தது; ஆடை தயாரிப்பு முடங்கியது; தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையை வர்த்தகரிடமிருந்து பெறுவதில் தாமதம், ஆர்டர் இழப்பால், நிறுவனங்களின் நிதி நிலைமை, மோசமடைந்தது; இத்துறை சார்ந்த எட்டு லட்சம் தொழிலாளர், தற்காலிக வேலை இழப்புக்கு தள்ளப்பட்டனர்.

இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், பின்னலாடை துறை மீண்டும் எழுச்சி பெறத்துவங்கியது.வெளிநாடுகளில் இருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.தற்போது மூன்றாவது அலை உருவாகிவருகிறது. மாவட்ட தினசரி தொற்று பாதிப்பு, 800ஐ கடந்துள்ளது. கொரோனா பரவல் நாளுக்குநாள் வேகமெடுத்துவருவது, தொழில் துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தடுப்பூசிகள் பேராயுதமாக நம்மிடம் உள்ளன. பின்னலாடை தொழிலாளர், தொழில்முனைவோர், தவறாமல் 'பூஸ்டர்' டோஸ் செலுத்திக்கொள்ளவேண்டும்.

கொரோனா குறித்து பயப்படத்தேவையில்லை. தொற்று பாதித்தோர் விரைந்து குணமடைகின்றனர். அதனால்தான் பிரிட்டன் உட்பட வெளிநாடுகள், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. மத்திய, மாநில அரசுகளும் ஊரடங்கு பிறப்பிக்காது என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில் இருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனாவால் தொழில் முடங்கியது. இந்தாண்டு, கொரோனாவால், தொழில் பாதிப்படைய வாய்ப்பு இல்லை. தொழில் துறையினர், வீண் பயம் கொள்ள தேவையில்லை. அதற்காக, அலட்சியமாகவும் செயல்படக்கூடாது. நிறுவனங்களின் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். தொழிலாளர் கை கழுவ வசதி செய்யவேண்டும். கூடி நின்று பேசுவது, பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது.ஒவ்வொருவரிடமும் தொற்று குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் புரிதல் உள்ளது. நமக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டால், இந்த அசாதாரண சூழலை எளிதாக கடந்துவிடலாம்.

இந்தாண்டு பஞ்சு, நுால் விலையேற்றத்தால், ஆடை உற்பத்தி துறை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மாதம்தோறும் நுால் விலை உயர்கிறது. ஆனால், உற்பத்தி நிறுவனங்களும், வர்த்தகர்களும், குறுகிய காலத்தில் ஆடை விலையை உயர்த்த முடியாது.ஆடை விலை உயர்வு, உலகளாவிய மக்களின் வாங்கும் திறனை குறைத்துவிடும்; இதனால், ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும். மத்திய அரசு, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தினால், பிரச்னைகளெல்லாம், பஞ்சுபோல் பறந்துபோகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனாவால் தொழில் முடங்கியது. இந்தாண்டு, கொரோனாவால், தொழில் பாதிப்படைய வாய்ப்பு இல்லை. தொழில் துறையினர், வீண் பயம் கொள்ள தேவையில்லை. அதற்காக, அலட்சியமாகவும் செயல்படக்கூடாது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    சத்தம் போட்டு சொல்லாதீங்க. நெசவாளிகள் துயர் தீர்க்க பஞ்சு, நூல், ஊசி, பட்டன் , காஜா, காலர்,தையல் மெசின் தொகுப்பு ஒண்ணு குடுத்து திட்டம் போட்டுரும் இந்த விடியல் அரசு.

Advertisement