கல்லலில் அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்
காரைக்குடி-கல்லல் ஊராட்சியில் அரசு மருத்துவமனை அமைய வேண்டுமென கல்லல் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் தலைமையேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபரமேஸ்வரி, அழகுமீனாள் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா கூறுகையில்;கல்லல் ஊராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பல வருடங்களுக்கு முன்புவரை அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கல்லல் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது கல்லலில் அரசு மருத்துவமனை இல்லை. இப்பகுதி மக்கள் செம்பனுார் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மீண்டும் கல்லல் பகுதியில் அரசு மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஒன்றிய தலைவர் சொர்ணம்: கல்லல் அருகே உள்ள செம்பனுார் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கல்லல் பகுதியில் அரசு மருத்துவமனை அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.ஒன்றிய கவுன்சிலர் சங்கு உதயகுமார்: பல வருடங்களாக நிலவி வரும், கல்லல் பேருந்து நிலையம் மற்றும் கல்லல் சந்தை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தவிர கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் பணியமர்த்தப்பட வேண்டும்.பி.டி.ஓ., சங்கர பரமேஸ்வரி கூறுகையில்; புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்தை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!