பெண் இன்ஸ்., மீது நடவடிக்கை கோரி துணை கமிஷனர் அலுவலகம் முற்றுகை
ஓட்டேரி--சட்ட கல்லுாரி மாணவரை போலீசார் தாக்கிய விவகாரத்தில், பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வக்கீல்கள் புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சென்னை, வியாசர்பாடி, புதுநகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம், 21; சட்டக்கல்லுாரி மாணவர். இவர் 14ம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர், எம்.ஆர்., நகர் சந்திப்பில் சைக்கிளில் சென்ற போது, வாகன தணிக்கை செய்த போலீசார், முக கவசம் சரியாக அணியவில்லை என, அப்துல் ரகீமுக்கு அபராதம் விதித்தனர்.அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரது சைக்கிளை பறிமுதல் செய்தனர். சைக்கிளை பெற கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்ற அப்துல் ரகீமுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.ஆத்திரமடைந்த போலீசார் அவரை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் திருப்பி வைத்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விசாரித்து, உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய இரண்டு காவலர்களை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் நசிமா மீது நடவடிக்கை எடுக்க கோரி, வக்கீல்கள் புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!