dinamalar telegram
Advertisement

கொசஸ்தலை ஆற்றில் மெகா மண் திட்டு

Share
செங்குன்றம்--ஆற்றுக்குள் குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களால் அமைக்கப்பட்ட மண் திட்டை அகற்றி, நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக, ஆற்றில் கூடுதல் நீரை தேக்கி வைக்க, நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில், கடந்த, 2001ம் ஆண்டு நடந்த, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்த, 50க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்களுக்கு, சோழவரம் அடுத்த அலமாதி அருகே, தலா, 2.5 சென்ட் நிலத்தை மாற்று இடமாக வழங்க அரசு முன் வந்தது. ஆனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என, அதை ஏற்க மறுத்தவர்கள், காரனோடை பாலத்திற்கு அருகே, கொசஸ்தலை ஆற்று புறம்போக்கில், குடிசை வீடுகள் கட்டி குடியேறினர். அந்த பகுதிக்கு மல்லய்யா நகர் என பெயரிட்டனர்.ஆற்று வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் வசிக்கும் பகுதியில், 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு, மண் நிரப்பி மேடாக்கினர். ஆனாலும், சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வழங்கிய, தீர்ப்பை அடுத்து, 2006ம் ஆண்டு இறுதியில் ஆற்றுக்குள் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. இதையடுத்து ஆற்றின் எல்லையை வரையறுத்து, ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்த இடத்தில் உருவான மண் திட்டை அகற்ற, நீர்வளத்துறையினர், 15 ஆண்டாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.அதனால், அந்த இடத்தில் ஆற்றின் பரப்பளவு குறைந்து, மற்ற பகுதியில், 500 அடி அகலம் கொண்ட ஆறு, மேற்கண்ட இடத்தில் மட்டும், 300 அடி அகலமாக சுருங்கியது.இன்று வரை அதே நிலைதான் நீடிக்கிறது. இந்த பிரச்னையால், மழையால் கிடைக்கும் நீரை சேமிக்க வழியின்றி, வடிந்தோடி வீணாகிறது. மேற்கண்ட பகுதியில் உள்ள, மண் திட்டு அகற்றப்பட்டால், ஆற்றில் கூடுதல் நீரை சேமிக்க முடியும். அதன் வாயிலாக நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, காரனோடை, ஜனப்பன் சத்திரம், பண்டிக்காவனுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் நடக்கும், விவசாயத்திற்கும் உதவும். ஆண்டுதோறும், நீர்நிலை மராமத்து பணிகளை மேற்கொள்ளும், நீர்வளத்துறையினர், மேற்கண்ட மண் திட்டு அடைப்பை அகற்ற வேண்டும்.,மேலும், காரனோடை பாலம் முதல், பண்டிகாவனுார் வரை ஆற்றின் எல்லையை வரையறுத்து, உறுதியான கரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அபாயகரமான பிளாஸ்டிக் கழிவுகள்கொசஸ்தலை ஆற்றில் மண் திட்டு அடைப்புள்ள இடத்தில், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும், ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை மேயும் கால்டைகள், உயிரிழக்கின்றன. மேலும், ஆற்றில் கலக்கும் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகளால், ஆற்று நீரும் மாசடைகிறது. இந்த பிரச்னைக்கும், அரசு துறையினர் தீர்வு காண வேண்டும்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement