dinamalar telegram
Advertisement

ஓரணியில் அணிவகுத்த பின்னலாடை தொழில்துறையினர்:இன்னல் மறையும்... இனிமை பிறக்கும்!

Share
Tamil News
திருப்பூர்:பஞ்சு, நுால் விலை உயர்வில் இருந்து பின்னலாடை துறையை பாதுகாப்பதற்காக, திருப்பூர் தொழில் துறையினர் ஓரணியில் திரண்டுள்ளனர். இன்னல் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.சீசன் துவக்கத்திலேயே, உள்நாட்டில் பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்துவருகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, 75 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பஞ்சு விலையை கணக்கிட்டு, தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

குறுகிய காலத்தில் அபரிமிதமாக உயரும் நுால் விலையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. கடந்த நவம்பரில் கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்த நுால் விலை, டிசம்பரில் 10 ரூபாய் குறைந்தது. இம்மாதம் மீண்டும், கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கின்றன. உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் போட்டி அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆடை விலையை தொடர்ந்து உயர்த்த முடியாத நிலை உள்ளது.
ஆர்டர் பெறப்பட்டதில் இருந்து 30 முதல் 60 நாட்களில் ஆடை தயாரித்து அனுப்பப்படுகிறது. நுால் விலையின் சீரற்ற போக்கால், திட்டமிட்டு ஆடை தயாரிப்பது இயலாததாகிறது. ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுவதால், புதிய ஆர்டர்களை பெறமுடிவதில்லை; ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பது, பின்னலாடை நிறுவனங்களுக்கு, லாப இழப்பையும், நஷ்டத்தையுமே தருகிறது.
இதேநிலை தொடர்ந்தால், ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் கைநழுவி வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளுக்குச் சென்றுவிடும்.அப்படி நடந்துவிட்டால், தொழிலாளரும், தொழில்முனைவோரும் ஒரு நுாற்றாண்டாக அயராது உழைத்து உருவாக்கிய பின்னலாடை துறை கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்.எத்தகைய சூழலிலும் ஆடை உற்பத்தியை நிறுத்த தொழில் துறையினர் முன்வருவதில்லை.
அவசர ஆர்டர்களுக்கான ஆடை தயாரிப்புக்காக, வார விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமையும் பெரும்பாலான நிறுவனங்கள் முழு வீச்சில் இயங்குவது வழக்கம்.திருப்பூர் பின்னலாடை துறையினர் தற்போது உற்பத்தி நிறுத்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.நேற்று முதல் திருப்பூர் பின்னலாடை துறையினர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுமதியாளர் சங்கம் அறிவித்த இப்போராட்டத்துக்கு, அனைத்து தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங், கம்பாக்டிங், எம்ப்ராய்டரி, பிரின்டிங், செக்கிங், அயர்னிங், காஜாபட்டன் என பின்னலாடை துறை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள்; சரக்கு போக்குவரத்து அலுவலகங்கள் நேற்றும், இன்றும் இயக்கத்தை நிறுத்தியுள்ளன. 15 ஆயிரம் நிறுவனங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
நாளொன்றுக்கு 200 கோடி ரூபாய் வீதம், இரண்டு நாள் போராட்டத்தால், திருப்பூரில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது.இன்று ரயில் மறியல்:பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து, 'நிட்மா' சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.கோரிக்கைகள்என்னென்ன:யூக வணிகமே உள்நாட்டில் பஞ்சு விலை அபரிமிதமான உயர்வுக்கு காரணம் என்பது, ஜவுளித்துறையினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீத வரியை நீக்குவது; பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம், உள்நாட்டில் பஞ்சு விலை சீராகிவிடும். இந்திய பருத்தி கழகம், ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே பஞ்சு வழங்க வேண்டும்; வர்த்தகர்களுக்கு பஞ்சு விற்பனை செய்யக்கூடாது.தேவைப்பட்டால், நுால் மற்றும் துணி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கவேண்டும் என்பது, ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரின் கோரிக்கை.
வரும் பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இதில், பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அறிவிப்பு வெளியிடவேண்டும் என, தொழில் அமைப்பினர், மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு நிச்சயம் செவிசாய்க்கும்; தொழிலை சூழ்ந்துள்ள இன்னல்கள், விரைவில் மறையும் என்கிற நம்பிக்கையுடன், அரசின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர், திருப்பூர் தொழில் துறையினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement