dinamalar telegram
Advertisement

வி.ஐ.பி., கொடுக்குறாராம் ஷாக்கு... சீட்டு கேட்டவங்களுக்கு தள்ளுதாம் நாக்கு!

Share
Tamil News
ரேஸ்கோர்ஸ்சில் 'வாக்கிங்' போவதற்காக, சித்ராவும், மித்ராவும் பாலசுந்தரம் ரோட்டில் வண்டியில் போய்க் கொண்டிருந்தனர். சிக்னலுக்காக, அண்ணாதுரை சிலை அருகில் வண்டியை நிறுத்தினாள் மித்ரா.எம்.ஜி.ஆர்., சிலையில் கிடந்த மாலைகளை பார்த்ததும் சித்ரா, பேச்சை ஆரம்பித்தாள்.''அடுத்த வருஷம் எம்.ஜி.ஆர்., சிலையும், ஜெயலலிதா சிலையும் இங்க இருக்குமாங்கிறது சந்தேகமா இருக்கு. போன கவர்மென்ட்ல இந்த ரெண்டு சிலைகளையும் அனுமதியில்லாமல் இங்க வச்சதை எதிர்த்து, பொது நல மனு போட்டாங்க. இந்த கேஸ்லா, தமிழ்நாடு முழுக்க இருக்குற அனுமதியில்லாத சிலைகளுக்கு சிக்கலாயிருச்சு!''''எல்லா சிலைகளுக்கும் சிக்கலா?''''ஆமா... இந்த கேஸ்ல, தலைமைச் செயலாளர் பதில் சொல்லணும்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. அவரு, மாவட்டம் வாரியா எங்கெங்க கவர்மென்ட் இடத்துல, எங்கெங்க பிரைவேட் இடத்துல அரசு அனுமதியோட சிலை வச்சிருக்காங்கன்னு பட்டியல் தயாரிச்சிட்டாராம். அந்தப் பட்டியல்ல இருக்குற சிலைகளைத் தவிர, மத்தவை அனுமதியில்லாததுன்னு அர்த்தம்!''''அதனால...!''''அனுமதியில்லாத சிலைகளை அகற்றணும்னு கோர்ட் உத்தரவு போட்டா எடுத்துத்தானே ஆகணும். இதே மாதிரி தி.மு.க., சார்புல வச்சிருக்குற பல சிலைகளுக்கும் சிக்கல் வரும் போலிருக்கு!'' ''தி.மு.க., சார்புல உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிடுறதுக்கு விருப்ப மனு கொடுத்தவங்கள்ட்ட, நேர்காணல் நடத்துறதா சொல்லிட்டு, ஏன் தள்ளி வச்சிட்டாங்களாம். எலக்சன் மறுபடியும் தள்ளிப் போகுமா?'' என மித்ரா கேட்க, சட்டென்று மறுத்தாள் சித்ரா.''அதுக்கு வாய்ப்பு ரொம்பக் குறைவுப்பா; தேர்தல் நடத்துறதுக்கு ஆணையம் தயாரா இருக்கு, உடன்பிறப்புகள் பீதியில் இருக்காங்களாம். அமைச்சர் செந்தில் பாலாஜி, நேர்காணல் நடத்தப் போறாராம். அவரு, கட்சிக் கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும், 'நீங்க வசிக்கிற வார்டுல, உங்க பூத்துல கட்சிக்கு எத்தனை ஓட்டு வாங்கிக் கொடுத்தீங்க'ன்னு கேள்வி கேக்குறாராம். பழைய சிஸ்டம்னா, மாவட்டம் கால்ல விழுந்தோ, சென்னைல ரெகமண்டேசன் புடிச்சோ சீட்டு வாங்கிடலாம். இப்போ, என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்குறாங்க. ஏன்னா, 'கம்ப்ளீட் டேட்டா'வை கையில் வச்சிட்டு பேசுறாராம். எம்.எல்.ஏ., எலக்சன்ல எல்லா வார்டுலயும் அ.தி.மு.க., அதிக ஓட்டு வாங்கிருக்கு. அதனால, எல்லாருக்குமே சிக்கல் வருமாம்,''''அதெல்லாம் இருக்கட்டும். அன்புக்கு அடையாளமான அழைப்பை நிராகரிச்சிட்டாங்களாமே,''''அ.தி.மு.க., ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடத்துன 'மாஜி'யோட 'ப்ரோ' வகையறாவுக்கு, நடத்தப்போற ஜல்லிக்கட்டுக்கு ஆளும்கட்சி நிர்வாகிகள் அழைப்பும், டோக்கனும் அனுப்பிருக்காங்க. அவுங்க அழைப்பை திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா, டோக்கனை மட்டும் ரத்தத்தின் ரத்தங்கள் சில பேரு வாங்கி, வித்துட்டாங்களாம்!''''ஆட்சிக்கு வந்து எட்டு மாசமாகியும், இன்னமும் அ.தி.மு.க.,காரங்களைப் பார்த்து ஆபீசர்ஸ் பயப்படுறாங்கன்னு உடன்பிறப்புகள் புலம்புறாங்களாம். அவுங்க, 10 வருஷம் நல்லா சம்பாதிச்சு, நல்லா செட்டில் ஆயிட்டாங்க. நாங்க சம்பாதிக்க முடியலை; எப்படி கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிறதுங்கிறதுன்னு புலம்பித் தள்ளுறாங்க,'' என்ற மித்ரா, வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினாள்; இருவரும் நடக்க ஆரம்பித்தனர். ''ஆமாப்பா, நீ சொல்றதும் உண்மைதான்! கலெக்டர் ஆபீஸ்ல எந்த டிபார்ட்மென்ட்டுக்குப் போனாலும், அ.தி.மு.க.,வினருக்கு நெருக்கமானவங்களே இருக்காங்களாம்,''''அக்கா! கேரளாவுக்கு தினமும் டன் கணக்குல ப்ளூ மெட்டல்ஸ் போகுது. போலீஸ்காரங்களுக்கு போற மாமூல் நமக்குத் தெரியுது. மேலிடத்துக்கு அனுப்பனும்னு குவாரிக்கு ஒரு லட்சம், கிரசருக்கு ஒரு லட்சம்னு மிகப்பெரிய வசூல் நடத்திட்டு இருக்குது,''''அது தெரியலை, மித்து. ஆனா, ரெண்டு மூணு மாசமா, ரூரல் ஏரியாவுல போலீஸ்காரங்க இதுக்குதான் வசூல் பண்ணனும்னு இல்லாம, தாறுமாறா வசூல் பண்றாங்களாம். அதுலயும் கிணத்துக்கடவு, நெகமம், சுல்தான்பேட்டை ஸ்டேஷன்கள்ல கண்ட இடத்துலயும் வண்டிகளை மறிச்சு வசூல் பண்ணிட்டு இருக்காங்க. கிணத்துக்கடவுல ஒரு போலீஸ்காரர், 'ரூரல் பெரிய ஆபீசரே என் பாக்கெட்ல'ன்னு சொல்றாராம்!''''அடேங்கப்பா...அந்தளவுக்கு ரெண்டு பேருக்கும் என்ன நெருக்கமாம்?''''அதான் தெரியலை. அந்தப் போலீஸ்காரர் லேடீஸ் விஷயத்துல பல சிக்கல்ல மாட்டுனவரு. இவர், கோயம்புத்துார்ல இருந்து கேரளாவுக்குப் போற லாரிகள் அத்தனையிலயும் வசூல் பண்ற வேலையை பொறுப்பா செய்யுறாராம்!''''நீங்க சொல்ற ஸ்டேஷன்கள்ல மட்டுமில்லைக்கா. பொங்கலை ஒட்டி, தொண்டாமுத்துார், பேரூர், ஆலாந்துறை, காருண்யா நகர்னு ரூரல் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாக்கள்லயும் சேவல் சண்டை ஜெகஜோதியா நடத்திருக்காங்க. லட்சக்கணக்குல பந்தயம் கட்டிருக்காங்க. அதுலயும் ஏகப்பட்ட மாமூல் விளையாடிருக்கு!''''ஆலாந்துறை ஸ்டேஷன்னதும் ஞாபகம் வந்துச்சு. பூலுவபட்டியில் ஒரு வட மாநில ஆளை அடிச்சுக் கொன்ன மர்டர் கேஸ்ல, அக்யூஸ்ட்களுக்கு ஸ்டேஷன்ல ராஜமரியாதை கொடுத்திருக்காங்க. அவுங்க சொந்தக்காரங்க எல்லாம் இஷ்டம்போல் போய்ப் பார்த்துப் பேசிட்டு வந்திருக்காங்க. சாப்பாடு கொடுத்திருக்காங்க. அங்கயும் கரன்சி பேசிருக்கு!''''ஆலாந்துறைக்கு முன்னால ஒரு பேரூர் நியூஸ் இருக்கு. அங்க இருக்குற தாசில்தார் ஆபீஸ்ல 'ஏ ஒன்'னா வேலை பாக்குற ஒரு கிளார்க் இருக்காராம். பட்டா மாறுதல் உட்பட எந்த வேலையா இருந்தாலும், அவரைக் கவனிச்சா; 'பைல்' அடுத்த டேபிளுக்கு நகருதாம். இல்லேன்னா கோப்பு மொத்தமா தொலைஞ்சிருதாம். அதனால, தாசில்தார் ஆபீஸ் போறவுங்க முதல்ல அவருக்கு, 500 ரூபா வெட்டிர்றாங்களாம்!''மித்ரா சொல்லி முடிக்கும்போது, எதிரில் வந்த ஒருவரைப் பார்த்து வணக்கம் சொன்ன சித்ரா, அவர் கடந்ததும் பேச ஆரம்பித்தாள்.''மித்து! இந்தப் பெரியவர், ஞாயித்துக்கிழமை 'லாக் டவுன்'ல தெரியாம இங்க வந்திருக்காரு. போலீஸ்காரங்க பல பேரைத் திருப்பி அனுப்பிருக்காங்க. சில ஆபீசர்கள், சிட்டி வி.ஐ.பி.,க்கள் மட்டும் வழக்கம்போல போயிருக்காங்க. அதுல, ட்ரவுசர் போட்டு ஒருத்தர் உற்சாகமா 'வாக்கிங்' போயிருக்காரு. வேற யாருமில்லை...நம்ம மாவட்ட ஆபீசர் தானாம். இது, எப்பிடியிருக்கு?''''அக்கா! வர்ற எலக்சன்ல நம்ம ஊர்ல, 50 சதவீதம் பெண்கள்ல நிறைய்ய வி.ஐ.பி., பெண்கள் வருவாங்க போலிருக்கு!'' என்று மித்ரா அடுத்த மேட்டருக்குத் தாவ, ''எப்பிடிச் சொல்ற...?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''தி.மு.க.,வுலயும் நிறைய லேடீஸ் சீட் கேட்ருக்காங்க. அ.தி.மு.க.,வுல இப்பவே பட்டியல் ரெடிங்கிறாங்க. ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல, வடமாநிலத்தைச் சேர்ந்த வி.ஐ.பி., லேடிக்கு சீட்டுன்னு உறுதியாயிருச்சாம். அவருக்காக, வடவள்ளிக்காரர் இப்பவே களத்துல இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாராம்!'' என்றாள் மித்ரா.''அவுங்களுக்கு மட்டுமில்லை. பி.என்.புதுார், வடவள்ளி, வீரகேரளம் ஏரியாவுல இருக்குற ஒன்பது வார்டுலயும் அ.தி.மு.க.,வை ஜெயிக்க வைக்கிறதுக்கு, அவர் தீவிரமா வேலை பாக்குறாராம். செலவும் தீயாப் பண்றாராம். எந்த ஏரியா கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணுனாலும், திருவிழான்னாலும் அஞ்சு லட்சத்துல இருந்து, 25 லட்சம் வரைக்கும் வாரிக் கொடுக்குறாராம். உடன்பிறப்புகள் ஆடிப்போயிருக்காங்க!'' என்றாள் சித்ரா.''லேடீஸ் ஜெயிச்சா சந்தோஷம்தான். ஆனா, கணவர்களோட ஆட்டங்களை நினைச்சா பயமா இருக்கு. பெரியநாயக்கன்பாளையம் யூனியன்ல பிளிச்சி ஊராட்சியில், பெண் தலைவரோட கணவர் எல்லா விஷயத்துலயும் தலையிடுறார்னு மெம்பர்ஸ் புலம்புறாங்க. விசாரிச்சா... தீபாவளி, பொங்கல் எதுக்குமே உறுப்பினர்களை தலைவர் கவனிக்கலைங்கிறதே புகாருக்குக் காரணமாம்!''மித்ரா சொல்லி முடிக்கும் முன், ''மித்து! எனக்கு உடனே ஒரு பில்டர் காபி குடிக்கணும்...வா கிளம்புவோம்!'' என்று சித்ரா அழைக்க, இருவரும் 'வாக்கிங்'கை நிறுத்தி விட்டு, எதிர் ரோட்டுக்கு நடக்க ஆரம்பித்தனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement