dinamalar telegram
Advertisement

பிரதமர் பயணத்தில் குளறுபடி கடும் நடவடிக்கை அவசியம்!

Share
Tamil News
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. இங்கு, பிப்ரவரி ௧௪ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி சென்றார்.டில்லியில் இருந்து பத்திண்டா விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹூசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.


ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக, அவரால் ஹெலிகாப்டரில் செல்ல முடியவில்லை. எனவே, சாலை மார்க்கமாக பயணிக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, பஞ்சாப் மாநில டி.ஜி.பி.,யிடம் தெரிவிக்கப்பட்டது. ஹூசைனிவாலாவில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள மேம்பாலம் ஒன்றை பிரதமர் பயணித்த கார் அடைந்த போது, போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது தெரிய வந்தது.

இதனால், மேம்பாலத்திலேயே பிரதமர் மோடி, 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. இதனால், அவர் தன் பயணத்தை ரத்து செய்து, மீண்டும் டில்லி திரும்பி விட்டார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து, மத்திய - மாநில அரசுகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டன.'குளறுபடிக்கு காங்கிரஸ் அரசே காரணம்' என, பா.ஜ., குற்றம் சாட்டியது. அதே நேரத்தில், 'பிரதமர் நிகழ்ச்சிக்கு போதுமான கூட்டத்தை சேர்க்க முடியவில்லை என்பதால், அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது' என, காங்., பதிலுக்கு குற்றம் சாட்டியது.


இதற்கிடையில், பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, பாதுகாப்பு குளறுபடி பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.இக்குழு, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி பற்றி விரைவில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பரிந்துரைக்கும்.


அரசியல் கட்சிகள் மத்தியில், மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதற்காக, ஒரு கட்சியின் தலைவரை பிரசாரம் செய்ய விடாமல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பது சரியானதல்ல. மேலும், ஒரு நகருக்கோ, மாநிலத்திற்கோ பிரதமர் பயணம் மேற்கொள்ளும் போது, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் பங்கு மட்டுமின்றி, அவர் பயணம் மேற்கொள்ளும் மாநில போலீசாரின் பங்கும் முக்கியமானது. பிரதமரின் பயணத்தில் எந்த இடையூறும் நிகழாமல் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பே. இந்த விஷயத்தில் பிரதமருக்கு சரியான பாதுகாப்பை தர, பஞ்சாப் மாநில போலீஸ் நிர்வாகம் தவறிவிட்டது என்றே கூறலாம்.


மேலும், பஞ்சாப் மாநிலத்தில் முன்னர் பயங்கரவாதம் பெரிய அளவில் நிலவியது. அதனால், பிரதமராக இருந்த இந்திரா எடுத்த நடவடிக்கை காரணமாக, அவரது பாதுகாவலர்களாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இனியும் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படாத வகையில், சிறப்பு பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பு குறைபாடு நிகழ்ந்தாலும், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மேலும், மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி நிகழ்ந்ததற்கு, வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் உள்ள, மத்திய - மாநில உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும் காரணம் என்பது தெளிவாகிறது. இருந்திருந்தால், பிரதமர் செல்லும் பாதையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்காது. பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்பது, நாட்டின் கவுரவத்துடன் தொடர்புடையது. அதில் குளறுபடி நடக்காமல் தவிர்ப்பது மிக மிக முக்கியம்.


எனவே, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், தவறுக்கு யார் காரணம் என்ற ரீதியில் விசாரித்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • seshadri - chennai,இந்தியா

    சோனியா மாதிரி ஒரு.. தலைவராக இருக்கும் வரை ராகுல் மாதிரி ஒரு உதவாக்கரை இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.

Advertisement