dinamalar telegram
Advertisement

கராத்தே, குத்துச்சண்டையில் கலக்கல்: பதக்கங்களை குவிக்கும் சட்ட மாணவி

Share
கோபி: கராத்தே மற்றும் குத்துச்சண்டை போட்டியில், கோபி சட்டக்கல்லூரி மாணவி, தங்கம் முதல் வெண்கலம் வரை, பதக்கங்களை குவிக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டடிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்-கலைவாணி தம்பதி மகள் ஐஸ்வர்யா, 21; திருச்சி அரசு சட்டக்கல்லூரியில், எல்.எல்.பி., இரண்டாமாண்டு படிக்கிறார். யு.கே.ஜி., முதல் கராத்தேவில் பயிற்சி பெற்ற ஐஸ்வர்யா, ஐந்தாம் வகுப்பு பயின்றபோது, 'பிளாக் பெல்ட் பெற்றார். ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மாவட்ட, தேசிய அளவில், கராத்தே போட்டிகளில் பல பதக்கங்கள் குவித்துள்ளார். மாவட்ட அளவில் ஏழு தங்கப்பதக்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கலம் வென்றார். மாநில அளவில் நான்கு தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் வென்றுள்ளார். தேசிய அளவில் ஒரு தங்கம், சர்வதேச அளவில் ஒரு வெண்கலம் வென்றுள்ளார். உயர்கல்விக்காக கல்லூரி சென்ற ஐஸ்வர்யா, குத்துச்சண்டை போட்டியையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். மாவட்ட அளவில் ஆறு தங்கம், ஒரு வெள்ளி, பல்கலை அளவில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, மாநில அளவில், மூன்று தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த, 2021 டிச.,ல் பஞ்சாப்பில் இந்திய பல்கலை குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில், 75 முதல், 81 கிலோ எடை பிரிவில், காலிறுதிச்சுற்று வரை சென்றார். இதனால் வரும் பிப்.,25 முதல், மார்ச் 1 வரை, பெங்களூரில் நடக்கும், பல்கலை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வீராங்கனை ஐஸ்வர்யா கூறியதாவது: பெற்றோரின் ஒத்துழைப்பால்தான், இந்தளவுக்கு போட்டியில் சாதிக்க முடிந்தது. எந்த சூழ்நிலையிலும் பெண்களுக்கு தற்காப்பு கலையாக கராத்தே உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் பெண்களுக்கு இலவசமாக, இந்த கலையை கற்றுத்தரும் ஆர்வம் எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement