dinamalar telegram
Advertisement

பனை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி வாலிபர்

Share
Tamil News
பெரம்பலுார்: படித்து முடித்ததும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் வாலிபர்களுக்கு மத்தியில் சுற்றுச்சூழலை காக்கும் எண்ணத்தில் பெரம்பலுார் மாவட்ட பொறியியல் பட்டதாரி ஒருவர் பனை விதைத்து வருகிறார்.


பெரம்பலுார் மாவட்டம், இனாம்அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்ஆனந்த், 30, இன்றளவும் போதிய அளவு போக்குவரத்து வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்த இவர், 2011ல் பொறியியல் படிப்பை முடித்தார். பெங்களூரில் வேலை கிடைத்தது. ஆனால், இயற்கை விவசாயம் செய்யவே மனம் விரும்பியதால், தனக்கு சொந்தமான 10 ஏக்கரில் ஆறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார். பனை மரங்கள் நிறைந்த இனாம் அகரம் கிராமத்தில் செங்கல் சூளைகளும் அதிகம் அதனால், இங்கே செங்கல் சூளைகளுக்காக பனை மரங்களை சர்வசாதாரணமாய் வெட்டிச் சாய்த்தார்கள்.


இவற்றைத் தடுக்கும் எண்ணத்தில், மரங்களின் பயன்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததுடன், அழிவின் விளிம்பில் இருக்கும் பனையை விதைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளார். இவருக்கு சொந்தமான வயல்களில் 50 வயதை கடந்த வளமாக காய்க்கக்கூடிய 218 பனை மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 600 நுங்குவரை காய்க்கும் இவற்றை காசுக்கு விற்க விரும்பாதவர், அவற்றை அப்படியே பழுக்க விட்டு விதையாக்கி, அவற்றை நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் விதைத்து வருகிறார்.

திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையில் பெரம்பலுார் மாவட்ட பகுதியான திருமாந்துறை முதல் பாடாலுார் வரை பனை விதைகளை விதைத்துள்ளார். அவற்றில், ஆயிரக்கணக்கானவை முளைத்து தற்போது நன்கு வளர்ந்து வருகிறது. எஞ்சியுள்ள பனை விதைகளை இவரை தொடர்பு கொண்டு பனை விதை கேட்போருக்கு, பல்வேறு மாவட்டங்களுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கிறார்.


இதுகுறித்து பிரேம் ஆனந்த் கூறியதாவது.. தமிழ் மண்ணின் பாரம்பரிய மரம் பனை. அதன் அருமை தெரியாமல் அழித்து வருகிறோம். பனை மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும். மண்ணரிப்பைத் தடுக்கும். விவசாயத்துக்கு நன்மை பயக்கும் பறவைகளின் வாழ்விடம். தனது சல்லி வேர் மூலம் நீரை உறிஞ்சி நிலத்தின் அடியில் சேமிக்கும். பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே நமக்கு பலன் தருகின்றன. தமிழகம் முழுவதும் மேலும் பரவலாக்க வேண்டும் இதற்காக துண்டு பிரசுரம் அச்சடித்து நான் போகுமிடமெல்லாம் மக்களிடம் கொடுத்து பனை மரங்களை வளர்க்க சொல்லி விதைகளையும் வழங்கி வருகிறேன்.

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பனைமரங்களை ஏராளமாக உருவாக்கினால் சூழலியல் சீர்கேடுகளை ஓரளவுக்காவது சரி செய்ய முடியும். மழை காலங்களில் நீர்நிலைகளின் கரைகள், வரத்து வாய்க்கால்களை ஒட்டிய பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ளிட்ட இடங்களில் போகிற போக்கில் துாவிவிட்டால் போதும் 3 மாதத்தில் வேறு பிடித்து தானாகவே வளர்ந்துவிடும். இந்த முயற்சியை என்னை போன்ற தனி நபர்கள் மட்டும் அல்லாது அரசாங்கம் முன்னெடுத்து செய்தால், அது இயற்கைக்கு செய்த பேருதவியாக இருக்கும். அரசு வேளாண் பட்ஜெட்டில் பனையை பாதுகாக்கும் திட்டம் அறிவித்ததை தீவிரமாக செயல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • R RAVINDHARAKUMAR T. GODE -

  வாழ்துக்கள் நண்பரே உங்கள் செயல் உங்கள் தலைமுறையை வாழவைக்கும்

 • Balaji - Chennai,இந்தியா

  சொந்தமாக பத்து ஏக்கர்.. அது ரொம்ப முக்கியம்.. காற்றில் விவசாயம் செய்ய முடியாது.. நிலம் வேண்டும்.. நிலம் இருந்து கையிருப்பும் இருந்தால் இதெல்லாம் தாராளமாக செய்யலாம்..

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒருகாலத்தில் பத்துகோடிக்கு அதிகமான பனை மரங்கள் தமிழ்நாட்டில் இருந்ததாம் .கண்டிப்பாக தமிழக அரசு வனத்துறை உதவப்போவதில்லை . ஒவொரு ஊரிலும் உள்ள தன்னார்வக்குழுக்கள் பள்ளிமாணவர்களின் உதவியுடன் irupathuகோடி மரம் வளர்க்கலாம்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பனைமரங்கள் இருந்தால் பட்டினி என்ற சொல்லுக்கே இடமில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தை அழிப்பதாகச் சொல்லிய இலங்கை இராணுவம், வடஇலங்கையில் இருந்த எல்லாப் பனைமரங்களை அழித்துவிட்டது. பனம்பிட்டு, பனங்கூழ், பனாட்டு, பனம்பெட்டி, பனம்பாய், கருப்பட்டி இப்படி எத்தனையோ வகைகளை இழந்துவிட்டோம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பனையேறி வகையறாவாக இருப்பாரோ? பாராட்ட வேண்டும். கற்பகவிருட்சம் என்ற பனைமரத்தை ஊக்கத்துடன் விதைக்கும் இவரது பரம்பரையே சிறப்புறும். வாழ்த்துகள்

Advertisement