ADVERTISEMENT
திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. வரும் நாட்களில் மிகுந்த உஷாருடன் இருக்க வேண்டும்,' என, சுகாதாரத்துறை அறிவுரை வழங்குகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இம்மாதம், 6ம் தேதி, 4,219 பேருக்கு தொற்று பரிசோதனை செய்ததில், 80 பேருக்கு தொற்று உறுதியானது. பரவல் விகிதம், 1.9 சதவீதமென கணக்கிடப்பட்டது. கடந்த 8ம் தேதி, 4,303 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 127 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. பரவல் விகிதம், 3 சதவீதம் ஆக உயர்ந்தது.அடுத்து வந்த இரு தினங்களிலும் பரவல் விகிதம் நாள் ஒன்றுக்கு, 1.5 முதல், 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த 10ம் தேதி, 3,775 பேருக்கு நடந்த சோதனையில், 219 பேருக்கும் (5.8 சதவீதம்), மறுநாள் (11 ம் தேதி) 3,375 பேருக்கு நடந்த சோதனையில், 238 பேருக்கும் (7.1 சதவீதம்) தொற்று கண்டறியப்பட்டது.அதாவது, கடந்த, 6 ம் தேதி, 1.9 ஆக இருந்த பரவல் விகிதம், அடுத்த ஆறு நாட்களில் உயர்ந்து, 7.1 ஆக மாறியுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தற்போது கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அப்படியிருந்தும் பரவல் விகிதம் அதிகரிக்கிறது.தொற்று பாதித்தவரின் உடனிருந்தவர், அறிகுறி தென்பட்டவர் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள முன்வந்தால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்திருப்பது தெரியவரும். மாவட்டத்தில் குறைந்திருந்த கொரோனா அதிகரித்துள்ளதால், கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இறப்பு விகிதம் குறைவுகொரோனா ஒருபுறம் வேகமெடுத்து வந்தாலும், அன்றாட இறப்பு சற்று குறைந்து ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கடந்தாண்டு ஜூலையில் (முதல் இரு வாரங்களில்), 49 பேர் கொரோனா பாதித்து இறந்தனர். ஆகஸ்டில், 52 பேரும், செப்., மற்றும் அக்டோரில் தலா, 8 பேரும், நவ., மாதம்., ஆறு பேரும் தொற்றுக்கு பலியாகினர்.கடந்தாண்டு டிசம்பரில், ஆறு பேர் இறந்த நிலையில், நடப்பாண்டு ஜன., 1 முதல், 13 வரையிலான இரு வாரத்தில், மூன்று பேர் பலியாகினர். முந்தைய மாதங்களோடு ஒப்பிடுகையில், இறப்பு வெகுவாக குறைந்துள்ளது சுகாதாரத்துறைக்கும், பொதுமக்களும் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!