திருப்புத்துாரில் சாலையோர அரிப்பு தடுக்கப்படுமா
திருப்புத்துார்:திருப்புத்துாரில் புதியதாக ரோடு அமைக்கும் போது ரோட்டின் இருபுறமும் கிராவல் மண் போட்டு அணைக்கப்படாததால் பல இடங்களில் ரோடு சரிந்து சேதமாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பகுதியில் கிராமச்சாலை முதல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ரோடுகளின் தரம் வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும் விதிமீறல் ஒரே பாணியில் நடைபெறுகிறது.சாலையின் இருபுறமும் கிராவல் மண் கொட்டி மண்ணை இறுக்கமாக்கி சரிவை தடுக்க உதவும்' எட்ஜ் பேக்கிங்' நடைமுறைப்ப்படுத்தப்படுவதில்லை. விதிப்படி அரை அடி ஆழம் ஒரு மீட்டர் அகலத்தில் ரோட்டோரம் இரு புறமும் கிராவல் மண் கொட்ட வேண்டும்.ஆனால் தற்போது அனைத்து சாலைப் பணிகளிலும் ரோட்டோரம் உள்ள பகுதியில் உள்ள மண்ணையே வெட்டிப் போடுகின்றனர். பெரும்பாலும் நெகிழ்வான இந்த மண் மழையில் கரைந்து, சரிந்து விடுகிறது. இதனால் தார் ரோடும் சேதமடைந்து விடுகிறது.இது போன்ற விதிமீறும் சாலைப்பணிகள் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் மழை பெய்தால் மண் அரிப்பும் அடுத்து ரோடு சேதம் அடைவதும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது.பின்னர் பராமரிப்புப் பணியாக இரட்டை செலவு தொடர்கிறது. நகர்ப்புற பகுதிகளில் போடப்படும் ரோடுகளில் வடிகால் உயர்த்தப்படாமல் போடும் போதும் ரோடு சரிந்து சேதமாகிறது. அதிகாரிகள் இதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!