பாழும் கிணற்றில் குவியும் கழிவு: சுற்றுச்சூழலுக்கு கேடு; அதிகாரிகள் பாராமுகம்
அவிநாசி;சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை தரம் பிரிக்கும் பணியும் மேற்கொள்ள வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.அவிநாசி பேரூராட்சி சார்பில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ஊரக பகுதிகளில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவதில்லை. நகர மற்றும் ஊரகப்பகுதி களில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள், தங்களின் கடை கழிவுகளை, ரோட்டோரம் உள்ள பாழும் கிணறு, குழி மற்றும் நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்; இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.சமீபத்தில், கோவை பைபாஸ் ரோட்டோரம் மூடப்படாத தனியாருக்கு சொந்தமான பாழும் கிணற்றில் சில நாய், பூனைக் குட்டிகள் விழுந்து கிடந்தன. அவற்றை சில இளைஞர்கள் மீட்டெடுத்தனர். அந்த கிணற்றில் இறைச்சிக்கழிவுகளும், பாலிதீன் கழிவுகளும் தான் நிரம்பியிருக்கின்றன.இக்குழியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்கு முற்படும் நாய், பூனை உள்ளிட்டவை, கிணற்றில் தவறி விழுகின்றன. இதுபோன்று பல இடங்களில் நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டோரம், இறைச்சிக்கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:துாய்மை இந்தியா திட்டத்தை சிறப்புற செயல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அவ்வப்போது, இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள், துறை அதிகாரிகளால், முன்னேற்பாடுகளுடன் திட்டமிடப்பட்ட இடங்களில் மட்டும் கள ஆய்வு செய்துவிட்டு, சென்று விடுகின்றனர்.சுகாதார சீர்கேடு நிறைந்துள்ள இடங்கள், அவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றன. எனவே, சுகாதாரம் சார்ந்த பிரச்னையில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!