மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
மதுரை :மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் திருமங்கலம், சேடபட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக மதுரை வேளாண்மை கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் சாந்தி தெரிவித்தார்.புதிதாக உருவெடுத்துள்ள இப்படைப்புழுக்களால் அதிக பொருளாதார சேதம் ஏற்பட்ட நிலையில் கோவை பல்கலை, மதுரை, கிள்ளிகுளம்(நெல்லை) மற்றும் திருச்சி வேளாண்மை கல்லுாரிகளில் இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை வேளாண்மை கல்லுாரிக்கு தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பதற்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையே எந்த ரசாயன பூச்சிகொல்லியை பயன்படுத்தினால் படைப்புழுக்கள் கட்டுப்படும் என்ற ஆராய்ச்சியும் நடத்தப்பட்டது என்கிறார் துறைத்தலைவர் சாந்தி.அவர் கூறியதாவது: காரிப் பருவத்தில் திருமங்கலம், சேடபட்டி, கள்ளிக்குடி மற்றும் டி.கல்லுப்பட்டியில் உள்ள 15 விவசாயிகளை தேர்ந்தெடுத்து தலா ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடும் முறையை கண்காணித்தோம். விதை வாங்கி உரமிடுவது விவசாயிகளின் வேலை. விதை நேர்த்தி செய்து, குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மற்றும் வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்த வைத்து படைப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தினோம். நாங்கள் பரிந்துரைத்த மருந்துகளால் புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார சேதம் குறைந்துள்ளது.இதையடுத்து அலங்காநல்லுார், வாடிப்பட்டியில் தண்ணீர் வசதியுள்ள 30 விவசாயிகளுக்கு ராபி பருவத்திற்கான மக்காளச்சோள பயிர் ஆலோசனை வழங்கிவருகிறோம். விவசாயிகள் மட்டுமின்றி பூச்சிமருந்து டீலர்கள், வேளாண்மை துறை உதவி இயக்குனர், அலுவலர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கிறோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!