dinamalar telegram
Advertisement

தேர்தல் செலவு உச்சவரம்பு அதிகரிப்பு அவசியமானதே!

Share
Tamil News
கொரோனா தொற்று பரவல், சமீப நாட்களாக பல மாநிலங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் உரிய நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனாலும், ஐந்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டு விட்டார். அதில், உத்தர பிரதேசத்தில், பிப்ரவரி 10முதல் மார்ச் 7ம் தேதி வரை ஏழு கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டமாகவும், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற யூகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி ஹரிஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைப்படி, தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க ஆணையம் சம்மதித்துள்ளது.
அதன்படி, லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு, பெரிய மாநிலங்களில் 70 லட்சத்தில் இருந்து 90 லட்சம் ரூபாயாகவும், சிறிய மாநிலங்களில் 54 லட்சத்தில் இருந்து 75 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு, பெரிய மாநிலங்களில் ௨8 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாகவும்
தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று, அதை மத்திய அரசின் அரசிதழில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய செலவு உச்சவரம்பு, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கும் பொருந்தும். வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பானது.
இதற்கு முன், 2014ம் ஆண்டு பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், தற்போது தான் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு என, பல விஷயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், இந்த உச்சவரம்பு அதிகரிப்பு சரியானதே.
மேலும், தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில், சுகாதாரத் துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், காணொலி காட்சிகள் வாயிலாக பொதுக்கூட்டங்கள் நடத்துவது, சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்வது என, பல விதத்திலும் செலவுகள் அதிகரித்துள்ளது என்பதால், இந்த உயர்வானது அவசியமே. தற்போது, தேர்தலில் போட்டியிடுவது என்பது பல கோடிகள் புரளும் நடவடிக்கையாகி விட்டது.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள உச்சவரம்பை தாண்டி, ஏராளமான வேட்பாளர்கள் செலவு செய்தாலும் அவை எல்லாம் கணக்கில் வருவது இல்லை. அதே நேரத்தில், தேர்தலில் போட்டியிடும் கட்சி களும், வேட்பாளர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என சுதந்திரமாக விட்டு விட்டாலும், அது பெரிய அளவில் பாதகத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவர்.
வசதிஇல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை உருவாகி விடும். 2015 முதல் 2020வரை நடைபெற்ற தேர்தல்களில்,18 அரசியல் கட்சிகள் மட்டும், 6,500கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.அதிலும் குறிப்பாக, மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., மட்டும்3,600 கோடி ரூபாயும், அதற்கு அடுத்ததாக, காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது மொத்த தேர்தல் செலவில் இந்த இரு கட்சிகளின் பங்கு மட்டும் 77சதவீதம். அதிலும் கணிசமான தொகை விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. எனவே, வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்ச வரம்பை அதிகரித்துள்ளது நல்லதே. ஆனாலும், இந்த உச்சவரம்பிற்குள் வேட்பாளர்கள் செலவிடுவரா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். இருப்பினும், கட்டுப்பாடு நீடிப்பது நல்லதே. இல்லையெனில், கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைமை நாடு முழுதும் உருவாகி விடும்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement