dinamalar telegram
Advertisement

கரூர் ரத்தத்தின் ரத்தங்கள் எடுத்துட்டாங்க ஏலம்... கோவை உடன்பிறப்புகளுக்கு போதாத காலம்

Share
Tamil News
மதுக்கரை செல்வதற்காக பாலக்காடு ரோட்டில், டூவீலரில் சித்ராவும், மித்ராவும் போய்க் கொண்டிருந்தனர். சுகுணாபுரத்தைத் தாண்டும்போது, சித்ராதான் பேச்சை ஆரம்பித்தாள்...

''மித்து! வண்டியை பார்த்து ஓட்டு...குறுக்கால சிறுத்தை ஏதாவது வந்துடப் போகுது!'' ''ஒரு காலத்துல இந்த ஏரியாவுக்கு காட்டுயானை வந்து போயிட்டு இருந்துச்சு. இப்போ சிறுத்தை வருது. கவர்மென்ட் மாறுனதுல இது ஒண்ணுதான் மாறிருக்குன்னு நினைக்கிறேன். சுகுணாபுரத்துல சிறுத்தையைப் பார்த்ததுல இருந்து, மக்கள் பெரும்பீதியில இருக்காங்க. காலையிலயும், சாயங்காலமும் 'வாக்கிங்' போறது கூட பாதியா குறைஞ்சிருச்சாம்!''

''இது 'மாஜி'யோட ஏரியாங்கிறதால, பாரஸ்ட் டிபார்ட்மென்ட் கண்டுக்காம இருக்காங்களோ?''

''அப்பிடியெல்லாம் இல்லை...இப்பவும் பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல அவுங்களுக்கு வேண்டியவுங்கதான் நிறைய்யப் பேரு கோயம்புத்துார்ல இருக்காங்களாம். அதுலயும் பாரஸ்டர்ல இருந்து, இப்போ ஏ.சி.எப்.,ஆன வரைக்கும் இதே ஊர்லயே நகராம இருக்குற பாரஸ்ட் ஆபீசர் ஒருத்தர், அவுங்களுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமா இருந்தாரு. அவர்தான் இப்பவும் கோவை வனத்துறையில கோலோச்சிட்டு இருக்காரு''

''அவர் போன கவர்மென்ட் இருந்தப்போ, ஏகப்பட்ட வேலைகளைச் செஞ்சு கொடுத்து, வலுவா சம்பாதிச்சிட்டார்னு கேள்விப்பட்டேன். இப்பவும் அவரை ஏன் மாத்தலைன்னு டிபார்ட்மென்ட்லயே பல பேரு குமுறிட்டு இருக்காங்க!''

''அதை விடுங்கக்கா...சுவர் விளம்பரங்களை எல்லாம் பார்த்தீங்களா...தேர்தலுக்கு தி.மு.க., ஜரூரா தயாராகுதோ...!''

''ஆமா மித்து! அதுலயும் எம்.எல்.ஏ., எலக்சன்ல தோத்துப்போனவுங்கதான், ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. ஆனா ஏற்கனவே தோத்தவுங்களுக்கு கண்டிப்பா சீட் கொடுக்கக்கூடாதுன்னு இப்பவே கட்சிக்குள்ள மானாவாரியா பெட்டிஷன் தட்டிட்டு இருக்காங்க. செந்தில் பாலாஜி சொல்றவுங்களுக்குதான் சீட்டுன்னு முடிவாயிட்டதால, அவரை காக்கா பிடிக்கிறதுக்கு ஆளுக்கு ஆளு ரூம் போட்டு யோசிக்கிறாங்க. அதுக்குதான் இந்த விளம்பரமெல்லாம்!''

''இதுல மருதமலைக்காரரு, ஜல்லிக்கட்டு ரூட்டைப் பிடிச்சிருக்காரு. அ.தி.மு.க., ஆட்சியில, ஜல்லிக்கட்டு சங்கம்கிற பேருல, மாவட்ட நிர்வாகத்தோட சேர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துனாங்க. இப்போ புதுசா ஜல்லிக்கட்டுப் பேரவைன்னு ஆரம்பிச்சு, கட்சி நிகழ்ச்சியா நடத்தி ஸ்கோர் பண்றதுக்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்கற மாதிரித் தெரியுது!''

''சங்கம் ஏன் பேரவையா மாறுச்சு தெரியுமா...மாவட்ட நிர்வாகத்தோட சேர்ந்து நடத்துனா, மக்கள் பிரதிநிதிகளைக் கூப்பிட்டே ஆகணும். ஆளும்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட கிடையாது. பல சிக்கல்கள் வரும். அதனால, கட்சி நிகழ்ச்சியா நடத்துறதா முடிவு பண்ணிருக்காங்க. வழக்கமா பொங்கல் முடிஞ்சுதான், மதுரை ஏரியாவுலயே ஜல்லிக்கட்டு நடத்துவாங்க. ஆனா இங்க அதிசயமா பொங்கலுக்கு முன்னாலயே நடத்துறாங்க!''

''ஒரு வேளை மூணாவது அலை வேகமாப் பரவி, ஜல்லிக்கட்டு நடத்தவே முடியாமப் போயிரலாம். அப்பிடிப் பண்ணுனா, அதை வச்சு ஸ்கோர் பண்ற முயற்சி 'பெயிலியர்' ஆயிடும்னு மருதமலைக்காரரு கணக்குப் போட்டிருக்காரு போலிருக்கு. ஆனா இந்த ஐடியாவுமே, அவர்ட்ட மறைமுகமா நெருக்கமா இருக்குற அ.தி.மு.க., மாஜியோட ஐடியாதான்னு ஒரு பேச்சு ஓடுது!''

''ஓஹோ...அதனாலதான், அவருக்கு நெருக்கமா இருந்த 'மாஜி'யோட சொந்தக்காரரையே பேரவைக்கு கவுரவ ஆலோசகராப் போட்ருக்காங்களா?''

''அப்பிடித்தான் பேசிக்கிறாங்க...ஆனா கொரோனா பரவுற ஸ்பீடைப் பார்த்தா, அரசர், தளபதி அத்தனை பேருடைய ராஜதந்திரங்களும் வீணாகிப் போயிரும் போலிருக்கே!'' என்று பலமாகச் சிரித்தபடி மித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் சித்ரா...

''என்னதான் ஜல்லிக்கட்டு நடத்துனாலும், சிட்டியில தேர்தல்ல தேர்றது கஷ்டம் போலிருக்கே...அடுத்தடுத்து பேரைக் கெடுக்குறதுமாதிரி பல வேலைகள் நடக்குது. சாய்பாபா காலனியில கிருஷ்ணர் சிலை உடைப்பு விவகாரம், போலீசை ரொம்பவே டென்ஷன் ஆக்கிருக்காம். தேர்தல் நேரத்துல இது ஆளும்கட்சிக்கு ஆப்பு வச்சிரும்னு பயப்படுறாங்க!''

''அது மட்டுமா...ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் விவகாரத்துல போலீஸ் மேலயும், கவர்மென்ட் மேலயும் தாறுமாறா புகார் கிளம்பிருக்கு. யாரோ வேணும்னே இந்த வேலையைப் பார்த்துட்டதா போலீஸ் ஆபீசர்களே புலம்புறாங்க...அதே மாதிரித்தான் டாஸ்மாக் 'பார்' ஏலத்துலயும் அமைச்சர் மேல, ஆளும்கட்சிக்காரங்களே செம கடுப்புல இருக்காங்க!''

''நானும் கேள்விப்பட்டேன் மித்து...மாவட்டத்துல இருக்குற 274 'பார்'களையும், எப்படியாவது நாம கைப்பத்திடலாம்னு உள்ளூர் உடன்பிறப்புகள் கனவுல மிதந்தாங்க. ஆனா அத்தனை 'பார்'களையும் கரூர்க்காரங்களே கைப்பத்திட்டு, ஆளும்கட்சிக்காரங்க கனவைக் கலைச்சு விட்டுட்டாங்களாமே!''

''ஆமாக்கா...கோயம்புத்துார், பொள்ளாச்சி ரெண்டு டாஸ்மாக் மாவட்ட ஆபீஸ்லயும் நடந்த டெண்டர்ல வெளியாட்களை டெண்டர் போடவே விடலை. ஊரே நியூ இயர் கொண்டாடிட்டு இருக்குறப்போ, டிச.,31 சாயங்காலம் ஆரம்பிச்சு, ஜனவரி 1 காலையில ஆறு மணி வரைக்கும், டெண்டரை கரூர்காரங்களே 'பைனல்' பண்ணிருக்காங்க. அதுல ஒண்ணு கூட, உள்ளூர்க்காரங்களுக்குக் கிடையாதாம்!''

''வெளியாட்கள் ரிஜிஸ்டர் தபால்ல போட்ருப்பாங்களே...அதெல்லாம் என்னாச்சாம்?''

''எதையுமே எடுத்துக்கலை...வெளியாட்கள் போட்ட டெண்டரை, முன்னாடியே உடைச்சு, அதுல ஒரு லட்சத்து 80 ஆயிரம்னு 'அப்செட் பிரைஸ்' போட்ருந்தா, ஒரு லட்சத்து 81 ஆயிரம்னு போட்டு, இன்னொரு டெண்டரைப் போட்டு அந்த பாரை எடுத்துருக்காங்க. கடை எண் வரிசைப்படியும் டெண்டர் நடக்கலை. சேல்ஸ் அதிகமா நடக்குற கடையெல்லாம் முதல்ல முடிவு பண்ணிருக்காங்க!''

''அவ்ளோ கடைக்கும் கரூர்ல இருந்து ஆள் கூப்பிட்டு வந்துட்டாங்களா?''

''அப்பிடித்தான் சொல்றாங்க...அதுலயும் கொடுமை என்னன்னா, அவுங்க எல்லாருமே, முன்னாள் அ.தி.மு.க.,காரங்களாம்...அதனாலதான், எலக்சன்ல மினிஸ்டருக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாம்னு உடன்பிறப்புகளெல்லாம் பயங்கர உக்கிரத்துல இருக்காங்க!''

''ஏதோ கரூர்க்காரரு இங்க வந்து, கருத்தா வேலை பார்த்து கோவையையே தலைகீழா புரட்டிப் போட்ருவாருன்னு சொன்னாங்க...இதானா அவரோட கருத்து... 'பார்' ஏலம் கிடைக்கலைன்னு கட்சிக்காரங்க கடுப்பா இருக்காங்க...ஆபீசர்ஸ் என்ன சொல்றாங்க?''

''அவுங்களுக்கு இவரைப் பத்தி இன்னமும் முழுசா பிடிபடலை...ஒரு சில ஆபீசர்ஸ், 'அவர்ட்ட ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லா இருக்கு...ஆனா பினிஷிங் சரியில்லை'ங்கிறாங்க. ஆனா ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் சந்தோஷப்படுறாங்க...!'' என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ''டைமிங் மெயின்டெயின் பண்றாரே...அதைச் சொல்றியா?'' என்று கேட்டாள் சித்ரா...

''அதேதான்க்கா...இதுக்கு முன்னாடி 'பவர்'ல இருந்த மாஜி மேல இதுதான் பெரிய புகாரா இருந்துச்சு. நாலுமணிக்கு வர்றதா சொன்னா ஏழு மணிக்கு வருவாரு...அவர் பேரை வச்சு, 'நாலுமணி ஏழுமணி....!'ன்னு ஆபீசர்ஸ் கமென்ட் அடிப்பாங்க. ஆனா இவரு, அஞ்சு மணிக்கு சொல்ற நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கே வந்து முடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுறாராம். கட்சிக்காரங்க, ஆபீசர்ஸ் அவரோட ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியலைங்கிறாங்க!''

வண்டியை ஆட்களே இல்லாத பேக்கரி முன் நிறுத்திய மித்ரா, ரெண்டு லெமன் டீ சொன்னாள். டீயை சுவைத்துக் கொண்டே அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.

''ஜவுளிகளுக்கு 12 பர்சன்டேஜ் ஜி.எஸ்.டி., போடுறதை கேன்சல் பண்ணி, பழையபடி அஞ்சு பர்சன்டேஜ் ஜி.எஸ்.டி.,ன்னு சொன்னதை நம்ம கொங்கு மண்டலமே கொண்டாடுது. அதேமாதிரி, நம்ம ஊருல இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுரை, ராமேஸ்வரத்துக்கு டிரெயின் விட்டுட்டாங்கன்னா, வர்ற எலக்சன்ல அ.தி.மு.க., கூட்டணி இன்னும் தெம்பாயிரும்!''

''சென்ட்ரல் பத்திப் பேசவும் ஞாபகம் வந்துச்சு...போஸ்டல் டிபார்ட்மென்ட்ல எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுனாங்க?''

''அந்த ஆர்ப்பாட்டத்துல கலந்துக்கிறதுக்கு இங்க இருக்குற யாருக்குமே விருப்பமில்லையாம்...தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தோட பொதுச்செயலாளர் பாராசர், போன மாசம் 31ம் தேதி ரிட்டயர்டு ஆகுறதா இருந்துச்சு. அவர் மேல இருந்த ஏதோ ஒரு புகார்ல சார்ஜ் சீட் கொடுத்திருக்காங்க. அதைக் கண்டிச்சு நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லிருக்காங்க!''

''ஒரு ஆளுக்காக நாடு முழுக்க ஆர்ப்பாட்டமா?''

''ஆமாக்கா...கொரோனா வேகமாப் பரவிட்டு இருக்குற நேரத்துல இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லைன்னு சில ஊழியர்கள் போர்க்கொடி துாக்கிருக்காங்க. ஆனா யூனியன்காரங்க கட்டாயப்படுத்தி, ஆர்ப்பாட்டத்துல கலந்துக்க வச்சிருக்காங்க!''

''மித்து...நம்ம ஊர்ல ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு...பள்ளிக்கல்வித்துறையில அலுவலகப் பணியில மூணு வருஷம் அனுபவம் இருக்கிறவுங்களுக்கு வேற இடத்துக்கு மாத்தலாம்னு போன கவர்மென்ட் அறிவிச்சாங்க...அது இப்பதான் நடைமுறைக்கு வந்திருக்கு. அதுல ரெண்டு பெண் தலைமையாசிரியர்களை நம்ம சி.இ.ஓ., வுக்கு உதவியாளராப் போட்ருக்காங்க. இந்தப் பதவியில பெண்களை நியமிக்கிறது இப்பதான் முதல் முறை!''

''கேக்கவே சந்தோஷமா இருக்குக்கா...ஆனா இந்த கவர்மென்ட் மாறுனதுல லேடீசுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காம இருக்கு!''

''என்னது போஸ்ட்டிங்கா...புரமோஷனா?''

''ரெண்டுமே இல்லை...கவர்மென்ட் ஆஸ்பத்திரிகள்ல ட்ரீட்மென்ட் எடுக்குற கர்ப்பிணிகளுக்கு 14 ஆயிரம் ரொக்கம், 2000 ரூபாய் 'ஒர்த்' உள்ள ஊட்டச்சத்து கிட், ஆறு தவணையா கொடுப்பாங்க. அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்கிற அந்த ஸ்கீம்ல பல மாசமா யாருக்குமே எதுவுமே கிடைக்கிறதில்லையாம். கேட்டா 'அது வேற கவர்மென்ட் இது வேற கவர்மென்ட்'ங்கிறாங்களாம்!''

''நம்பவே முடியாத தகவல் மித்து...போன கவர்மென்ட்ல, நம்ம கார்ப்பரேஷன் ஏரியாவுல 'மாஜி'யோட ஆசியோட டவுன் பிளானிங் பைல்களை கையாண்ட டிராவல்ஸ் அதிபர், கொஞ்ச நாளா சைலன்ட்டா இருந்தாரு. இப்போ, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு நெருக்கமாகி கோப்புகளை கையாள ஆரம்பிச்சிட்டாராம். ஆக ரெண்டுமே ஒரே கவர்மென்ட்தான்''சீரியஸ் ஆன முகத்தோடு சொன்ன சித்ரா, 'நீ வண்டியை எடு!' என்று பில்லைக் கொடுக்க எழுந்தாள்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement