Load Image
dinamalar telegram
Advertisement

மாரியம்மன் கோவில் சொத்துக்கள் விற்பனை: விரிவான விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சொத்துக்கள் விற்பனை தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. 'கும்பாபிஷேகம் நடத்தவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், சொத்துக்களை பாதுகாக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தேர்தலை நடத்தக் கோரி, திருப்பதி கவுண்டர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதிர்ச்சி தகவல்

விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அறநிலையத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதன்படி, கோவில் நிர்வாக அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:அறிக்கையை பரிசீலிக்கும்போது, அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவிலின் அசையா சொத்துக்களில் மூன்றாம் நபர்களின் குறுக்கீடு இருந்துள்ளது. 2001 மற்றும் 2007ம் ஆண்டுகளில், இரண்டு விற்பனை பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் வாயிலாக கோவில் சொத்துக்களை விழுங்கி உள்ளனர்.இந்த நிலங்களை மீட்க, அறநிலையத் துறையும், பரம்பரை அறங்காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரரான ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்த பின், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட பிறகே, விபரங்கள் தெரிய வருகிறது.சட்டவிரோத செயல்தனக்கு தெரியாமல், கும்பாபிஷேகத்தை திருப்பதி கவுண்டர் நடத்தியதாக, நிர்வாக அதிகாரி தெரிவித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.

நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் இன்றி, எப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.கோவிலின் இரண்டு அசையா சொத்துக்கள் மீட்கப்படவில்லை. பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக, நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சொத்துக்கள் விற்பனை தொடர்பாக, உண்மையை அறிய வேண்டும்.எனவே, அறநிலையத் துறை சார்பில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். கோவில் மற்றும் அதன் சொத்துக்கள் தொடர்பாக நடந்த சட்டவிரோத செயல்கள், தவறுகள் குறித்து, பொறுப்பான அதிகாரியை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, ஜனவரி 20க்கு தள்ளி வைத்துள்ளார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement