Load Image
dinamalar telegram
Advertisement

ஒமைக்ரான் பாதிப்பு: கோட்டை விட்டதா அரசு?: இறுதிச்சடங்கில் பங்கேற்ற 52 பேருக்கு தனிமை

Tamil News
ADVERTISEMENT
சென்னை :'ஒமைக்ரான்' தொற்று கண்டறியப்பட்ட நபர், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதால், தொடர்பில் இருந்த 52 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த 47 வயது ஆண், நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக, கடந்த 10ம் தேதி சென்னை வந்தார்.அதிக பாதிப்பு இல்லாத நாட்டில் இருந்து வந்ததால், அவருக்கு பரிசோதனை செய்யப்படவில்லை.

பரிசோதனை



தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்ற அவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 14ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினரை மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அதில், ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.சென்னை மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.ஆனாலும், பரிசோதனை முடிவை உறுதி செய்ய, மாதிரிகள் பெங்களூரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. இதில், நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு, ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 52 பேரை, சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு



இதற்கிடையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையில், மத்திய - மாநில அரசுகள் கோட்டை விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஒமைக்ரான் அதிக பாதிப்புள்ளதாக, தென் ஆப்ரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, 'ரேண்டம்' அடிப்படையில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

எனவே, குறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணியர், பல்வேறு நாட்டு பயணியருடன் தொடர்பில் பயணித்து நாடு திரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு இல்லை.


இதனால், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நபர், பல்வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கும் தொற்று பரவி விட்டது. இந்த விவகாரத்தில், மத்திய - மாநில அரசுகளுடன், சென்னை மாநகராட்சியும், இறுதிச் சடங்கு போன்றவற்றை கண்காணிப்பதில் கோட்டை விட்டுள்ளது.ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த 52 பேரும், ஐந்து நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த பின், நேற்று தான் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேகமாக பரவும்;



இவர்களுக்கும், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டால், இவர்கள் வாயிலாக பலருக்கு பரவி இருக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
தொற்று இல்லை என்றாலும், ஒரு வாரத்திற்கு தனிமையில் வைக்கப்படுவர். டெல்டா வகை வைரசிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தான், ஒமைக்ரானுக்கும் அளிக்கப்படுகிறது.ஒமைக்ரானை பொறுத்தவரை, பெரிய அளவில் உடல் பாதிப்பு இல்லை என்றாலும், தடுப்பூசி போட்டோர் முதல் அனைவருக்கும் வேகமாக பரவும் தன்மை உடையது என, உலக சுகாதார
நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முக கவசம் அணிவதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் கட்டாயம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    "சுற்றித் திரிந்த பின்" என்று குறிப்பிடுவது சாமானியர்களைக் கேவலப்படுத்தும் மனித உரிமை மீறிய செயல். "பயணித்து" என்பது போன்ற நாகரிகமான சொற்களைப் பயன்படுத்தவும்.

  • அப்புசாமி -

    முதலில் கோட்டை உட்டது ஒன்றிய அரசே... யாரு எங்கேருந்து வர்ராங்கன்னு தெரியாமலேயே உள்ளே உட்டுடறாங்க...

Advertisement