dinamalar telegram
Advertisement

லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

Share
Tamil News
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து அளிப்பது, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 2,500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பி.,க்கள் முன்வைத்தனர்.

*லோக்சபாவில் திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை பேசுகையில், ''தேசிய இளம் தலைவர்கள் திட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் உள்ளனர்.
''திருவண்ணாமலை மாவட்டத்தில், அது எவ்வாறு செயல்படுகிறது. திட்டத்தை மறுவரையறை செய்யும் எண்ணம் உள்ளதா,'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் நிதிஷ் பிரமானிக், ''இத்திட்டம் 2014ல் துவங்கியதில் இருந்து, தமிழகத்தைச் சேர்ந்த 3.29 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
திருவண்ணாமலையில் 981 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. திட்டத்தை மறுவரையறை செய்யும்எண்ணம் தற்போது இல்லை,'' என்று பதில் அளித்தார்.

*மத்திய சென்னை எம்.பி.,தயாநிதி:
போதைப் பொருள் பயன்படுத்தும் சிறுவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக கருதுவது என்று அரசு எடுத்த முடிவு
சரியானது. இருப்பினும், சிறுவர்கள் தொடர்பான போதைப்பொருள் சம்பவங்கள் பெரிதாக்கப்படுவதை ஏற்க இயலாது. இதில் உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள
வேண்டும்.


விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாக்கூர்
: உ.பி.யில் சமீபத்தில் உருவான கோரக்பூர் விமான நிலையம் மற்றும் திருப்பதி உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளது.
அதேபோல, 1956ல் துவக்கப்பட்டு 2010ல் புதிய முனையம் அமைந்த மதுரை விமான நிலையத்திற்கும், சர்வதேச அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.


*தேனி எம்.பி., ரவீந்திரகுமார்
: மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி நிறுவனம் அமைக்க 2009ல் மத்திய அரசு திட்டமிட்டதால், தமிழக அரசு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதன் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 1,100 கோடி ரூபாய் செலவிலான திட்ட மதிப்பீடு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கிடப்பிலேயே உள்ள இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.


*பெரம்பலுார் எம்.பி., பாரிவேந்தர்: குளித்தலை மற்றும் மணப்பாறை மார்க்கத்தில், ரயில்வே மேம்பாலம் இல்லாமல்மக்கள் அவதிப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்களும் காத்திருக்கும் நிலை இருப்பதால் மேம்பாலம் அமைக்க வேண்டும்.


*வடசென்னை எம்.பி., கலாநிதி:
கன மழை காரணமாக, தமிழகத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமடைந்து உள்ளதால் 2,500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
பருவநிலையை அறிவதற்கான மத்திய அரசின் செயலியை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளிலும் செயல்படுத்த வேண்டும்.

*திருவள்ளூர் எம்.பி., ஜெயகுமார்:
மாதவரம்- - தடா இடையே 43 கி.மீ., சாலை விரிவாக்க பணிகள் ஆறு ஆண்டுகளாக நடக்கின்றன. ஒப்பந்ததாரருக்கு கால நீட்டிப்பு, கூடுதல் நிதி வழங்கியும் பணிகள் முடியவில்லை. இதில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.


*ராமநாதபுரம் எம்.பி.,நவாஸ் கனி: கடல் அட்டை அழியும் உயிரினம் அல்ல என்பதால், இலங்கை அரசு அவற்றை பிடிக்க தடை விதிக்கவில்லை. ஆனால், நம் நாட்டில் அதை பிடிக்க தடை உள்ளது. இத்தடையை நீக்க வேண்டும்.

*தென்காசி எம்.பி., தனுஷ்குமார்: தென்காசியில், உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கேரளாவுடன் பேசி செண்பகவல்லி அணை பிரச்னையை தீர்த்து பல ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு, பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். செங்கோட்டை பகுதியில் காட்டு யானைகளின் அபாயத்தை தடுக்க வேண்டும். - நமது டில்லி நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • amuthan - kanyakumari,இந்தியா

  ஒன்பது பேர் மட்டுமே பேசியுள்ளார்கள். மற்றவர்கள் எங்கே எங்கே எங்கே

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  தமிழ்நாட்டில் இயக்கப்படும், பெரும்பாலான ஆம்னி பேருந்துகளின் பினாமிகள் யார் என்று புரிந்து கொண்டால், தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்கள் வராது என்பது புரியும்.

 • R Hariharan - Hyderabad,இந்தியா

  ஒருவரது ரயில்வே பற்றி பேச வில்லை. தென் தமிழகம் பல முறை புறக்கணிக்கப்பட்டு இதற்கு மதுரை தேனி மார்க்கத்தில் ரயில் சேவை விரைவில் தொடங்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி விட வேண்டும். தாம்பரம் செங்கோட்டை அண்டோடிய ரயில் விரைவில் தொடங்க வேண்டும். கொல்லம் செங்கோட்டை மின்மயமாக்க வேண்டும். ஹைதெராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமாரி வரை நீடிக்க வேண்டும். இது ஆஃப்ரொவள் அகி விட்டது. இது போன்ற பல ரயில்வே திட்டம் ஒருவரையும் பேச வில்லை.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  எங்கே போனார்கள் பெண்ணுரிமை பேசும் தமிழச்சி கனிமொழி.

Advertisement