dinamalar telegram
Advertisement

ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு; போக்குவரத்து போலீசார் நடவடிக்கையால் நெரிசல் குறைந்தது

Share
Tamil News
குரோம்பேட்டை--குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில், வாகனங்கள் நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் கட்டுப்பாடு விதித்து, தொடர்ந்து கண்காணிப்பதால் நெரிசல் குறைந்துள்ளது. சில ஆண்டுகளாக குரோம்பேட்டை பகுதி அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. பெரிய துணிக்கடைகள், நகைக்கடை, ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புகள், சினிமா தியேட்டர், கார் விற்பனையகம் என, ஏகப்பட்ட வணிக நிறுவனங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து குரோம்பேட்டைக்கு, தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்படி வருவோர், தங்களுடைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை, சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர்.காசநோய் மருத்துவமனை முதல் பாண்ட்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும், வரிசையாக வாகனங்களை நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, பண்டிகை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில், கடும் நெரிசல் நிலவி வந்தது.இதனால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, நெரிசல் இன்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, போக்குவரத்து போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதற்காக, இரண்டு குழுக்களை அமைத்து, காசநோய் மருத்துவமனை சிக்னல் முதல் பாண்ட்ஸ் சிக்னல் வரை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதையும் மீறி, யாராவது வாகனங்களை நிறுத்த முயன்றால், அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையிலும் இறங்கிஉள்ளனர். போலீசாரின் இந்த முயற்சியால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகள் இடையூறு இன்றி சென்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement