dinamalar telegram
Advertisement

பாதிப்பு; மாவட்டத்தில் கோமாரி நோயால் கால்நடைகள்...200 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதனைச் சார்ந்து கால்நடை வளர்ப்பு மற்றும் இறைச்சி, பால் உற்பத்தி விவசாயிகளுக்கு உபரி வருவாய் ஈட்டித் தருகிறது.

இப்பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் மந்தைகளாக ஆடு, மாடுகளை வளர்ப்பது அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி மேய்ச்சல் நிலங்கள் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாமல் ஒரே இடத்தில் கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதில் பெரும்பாலான ஆடு, மாடுகள் வெட்டவெளியில் மழையில் நனைந்தபடி பல நாட்கள் பரிதாபத்துடன் நின்று கொண்டிருந்தன. கால்நடைகளைக் கட்டி வைத்திருந்த கொட்டகைகளும் சேறும் சகதியுமாக மாறியது.

இதன் காரணமாக கோமாரி நோய் வேகமாக பரவியது. இந்நோய்க்கு காரணமான 'ஆப்தோ' எனும் வைரஸ் காற்றில் உள்ள ஈரப்பதத்தை கொண்டு பரவும் தன்மை கொண்டது.கோமாரி நோய் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும்.நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். குளம்புகளில் ஏற்பட்ட புண்ணில் புழுக்கள் உருவாகி நடக்க முடியாமல் சிரமப்படும்.இதை சரியான நேரத்தில் கவனித்து நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்கா விட்டால் சில தினங்களில் மாடு இறந்துபோகும்.கடந்த 10 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. ஆயிரக்கணக்கான மாடுகள் கோமாரி நோய் தாக்கி அவதிப்பட்டு வருகின்றன.நோய் பாதித்த மாட்டின் உமிழ்நீர், சிறுநீர், சாணம், பால் ஆகியவற்றின் மூலம் கோமாரி நோய் வைரஸ் வெளிப்பட்டு காற்றில் பரவி அடுத்தடுத்த மாடுகளுக்கும் நோய் தொற்றை ஏற்படுத்தி வருகிறது.அதேபோல் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளும் கோமாரி நோய் தாக்கத்தால் இறந்துள்ளன.குறிப்பாக கால்நடைகளை மந்தைகளாக வளர்ப்போர் கோமாரி நோய் பாதிப்பிலிருந்து அவற்றை பாதுகாக்க கடுமையாக போராடி வருகின்றனர்.அடுத்தடுத்து மாடுகள் இறப்பதைப் பார்த்து விவசாயிகள் செய்வதறியாது கவலை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் முக்கிய தொழிலாக உள்ள கால்நடை வளர்ப்பு, பால், இறைச்சி உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளது.ஆடு, மாடுகளுக்கு தொற்று நோய் பரவும் இத்தருணத்தில் கால்நடைத் துறையினர் போதிய தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருந்து தட்டுப்பாடும் இருக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சூழ்நிலையில் கால்நடை மருத்துவக் குழுவினர் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடத்தி மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.நோய் பாதித்த மாடுகளிடம் இருந்து மற்ற கால்நடைகளுக்கு கோமாரி பரவாமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement