dinamalar telegram
Advertisement

அதிகாரிகளை காத்திருக்க வைக்கும் அமைச்சர்!

Share
Tamil News

அதிகாரிகளை காத்திருக்க வைக்கும் அமைச்சர்!
ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''யாரும் மூச்சு விடப்டாதுன்னு கையெழுத்தே வாங்கிண்டுட்டா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவுல இருந்த பி.ஆர்.ஓ.,வை ஒன்பது மாசத்துக்கு முன்னாடி, நாகை மாவட்டத்துக்கு மாத்திட்டா... பி.ஆர்.ஓ., பணியை, துணை இயக்குனர் பொறுப்புல இருக்கறவரே பார்த்துண்டு இருக்கார் ஓய்...

''இவர் பூங்காவுல விலங்குகள் நிலவரம், அவற்றின் பிறப்பு, இறப்பு குறித்த தகவல்களை முறையா தெரிவிக்கறது இல்லை... அங்க இருக்கற சில ஊழியர்கள், தங்களுக்கு தெரிஞ்ச பத்திரிகையாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவிச்சு, அது செய்திகளா வந்துடுத்து ஓய்...

''உடனே கோபமான துணை இயக்குனர் மற்றும் இயக்குனர், 'பத்திரிகையாளர்களுக்கு எந்த ஊழியர்களும் தகவல் தெரிவிக்கப்டாது... மீறி தெரிவிச்சா, அவா மேல நடவடிக்கை எடுக்கப்படும்'னு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு, அதுல ஊழியர்களின் கையெழுத்தையும் வாங்கியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மணக்க மணக்க சாப்பாடு போட்டு அனுப்புறாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''தமிழக அமைச்சர்கள் பலர், ஆய்வுக் கூட்டம் நடத்த அடிக்கடி மதுரைக்கு வந்து போறாங்க... இவங்க, பெரும்பாலும் 'சர்க்யூட் ஹவுஸ்'ல தான் தங்குறாங்க...

''இவங்களுக்கான சாப்பாட்டை, மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்துடுறாருங்க... காலை டிபனுக்கே மட்டன் பாயா, சிக்கன் குருமான்னு அமர்க்களப்படுது... மதியமும் தடபுடலான அசைவ வகைகளோட பெரிய விருந்தே குடுத்துடுறாருங்க..
.
''அமைச்சர்கள் மட்டுமில்லாம, அவங்களோட வர்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கும் சேர்த்தே உணவு வந்துடுதுங்க... சாப்பிடுற எல்லாரும், அமைச்சரை வயிறார வாழ்த்திட்டு போறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''என்கிட்டயும் ஒரு அமைச்சர் தகவல் இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்டத்துல பல அரசு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறாரு... ஆனா, பல மணி நேரம் 'லேட்'டா வர்றதால, அதிகாரிகளும், ஊழியர்களும் காத்து கிடக்குறாங்க பா...

''குறிப்பா, கோபி தொகுதியில நடக்கிற எந்த நிகழ்ச்சிக்கும் அமைச்சர் குறித்த நேரத்துக்கு வர்றதே இல்லை... அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்ற வேலைகளை பார்க்க முடியாம சிரமப்படுறாங்க... பயனாளிகளும் பல மணி நேரம் காத்து கிடந்து வெறுத்து போயிடுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''அப்புறம் ஒரு விஷயம்... கோவை பெண் போலீஸ் அதிகாரி சுஹாசினி, டி.ஐ.ஜி., பெயரை சொல்லி, கீழ்மட்ட போலீசாரை மிரட்டுறதா பேசினோமுல்லா... அவங்க டூட்டியில சின்சியராகவும், கண்டிப்பாகவும் இருக்கிறது சிலருக்கு பிடிக்காம, தவறான தகவல்களை பரப்புதாங்கன்னு வருத்தப்படுதாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''அதே மாதிரி, திருச்சி எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜும், முதல்வரிடம் தனக்கு இருக்கிற நல்ல பெயரை கெடுக்கிறதுக்காக, தன் மேல சிலர் வேணும்னே பொய் புகார்களை சுமத்துறாங்கன்னு சொல்லியிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''நமக்கு யார் மேலயும் தனிப்பட்ட விரோதம் கிடையாதுங்கறது தான் எல்லாருக்கும் தெரியுமேங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு ஐந்து வருஷம் ஆட்டம் போட்டுவிட்டு நாளை தோற்றால் மூலையில் கிடக்க போகும் இவர்கள் முப்பதாண்டு உழைக்கும் நிலையில், அவர்களை அலட்சியம் செய்து அற்பனுக்கு பவிஷு வந்த திமிர் தான் இது இவர்கள் சொந்தக்காசை ஒன்றும் கொடுக்கப் போவதில்லை பயனாளிகளிடமும் 'கமிஷன்' பிடித்துக்கொண்டுதான் தரப்போகிறார்கள் இந்த அகம்பாவமும், அற்பத்தனமும்தான் இவர்களைக் கவிழ்த்துவிடும்

Advertisement