Load Image
dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் மழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது ... வருவாய், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டாய்வு

Tamil News
ADVERTISEMENT
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதித்த பயிர்கள் கணக்கெடுப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. வருவாய்த் துறை, வேளாண், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூட்டாய்வு நடத்தி வருகின்றனர்.வடகிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 80 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

நிலத்தடி நீர் உயர அதிக மழை தேவைப்பட்டாலும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் முளைத்தும், அழுகியும் போனது. அதனால் டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதும் பாதித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ஒரு எக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் அரசு அறிவித்தது.

அத்துடன் நெல் அழுகியதால் பாதித்த விவசாயிகளுக்கு மறு நடவு செய்ய தொகுப்பு திட்டம் அறிவித்தது. இத்திட்டத்தில் நெல், நுண்ணுாட்டக் கலவை, யூரியா, டி.ஏ.பி., ஆகிய பொருட்களின் தொகுப்பு ரூ. 6038 மதிப்பில் வழங்கப்பட்டது.வெள்ளப்பெருக்கு நவம்பர் மாதத்தில் 2 முறை கனமழை பெய்தது. இந்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுக்தாறு, பரவனாறு, மலட்டாறு போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் கரையோர கிராமங்களில் நடவு செய்த நெல், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பாழாயின. மேலும் வெள்ளப் பெருக்கில் ஏற்பட்ட 'சுழல்' காரணமாக நிலத்தில் ஆங்காங்கே யானை பிடிக்கும் பள்ளங்களாயின. கரை புரண்டு ஓடிய தண்ணீரால் சாலையோரம் உள்ள நிலங்களும் பாதித்தன.

பாதித்த விவசாயிகள் நிவாரண உதவிக் கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதித்த பயிர்கள், விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேளாண் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் ஒருங்கிணைந்து கூட்டாய்வு நடத்தி வருகின்றனர். அதேப் போல தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிலத்தில் ஏற்பட்ட மண் அரிப்புகளை சீரமைக்க பொறியியல் துறை மூலம் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது. விரைவில் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து தமிழக அரசின் அறிவிப்பை அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement