dinamalar telegram
Advertisement

கோவை மாநகராட்சியில் வண்டி வண்டியாய் ஊழல்! எரிபொருள், பராமரிப்புக்கு ரூ.40 கோடி செலவு!

Share
கோவை: நிதியில்லாமல் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கோவை மாநகராட்சியில், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் செலவிடப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கோவை மாநகராட்சியில், 2013-2014 நிதியாண்டின்போது, 300 கோடி ரூபாய் வரை டெபாசிட் இருந்தது.

கடந்த ஆறாண்டுகளில், அத்தனை நிதியும் கரைக்கப்பட்டதுடன், இப்போது சம்பளம் கொடுக்கவே நிதியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால் ரூ.150 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஊழலே காரணமென்பது ஊரறிந்த சேதி. அரசியல்வாதிகள் திட்டமிட்டு திட்டங்களில் அடிக்கின்ற கொள்ளை போக, திடக்கழிவு மேலாண்மை, கொள்முதல், பராமரிப்பு, செலவு கணக்குகளில் மாநகராட்சியின் பொறியாளர்கள் பலரும் அடித்துள்ள கொள்ளைக்கு அளவே இல்லை.ஆர்.டி.ஐ., மூலம் அம்பலம்கோவை மாநகராட்சியிலுள்ள வாகனங்கள் எண்ணிக்கை, அவற்றுக்கு ஆகும் மாதாந்திர எரிபொருள் செலவு, வருடாந்திர பராமரிப்புச் செலவு போன்ற பல்வேறு விபரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கிடைத்துள்ளன.

இதன்படி, மத்திய மண்டலத்தில் 71, கிழக்கு மற்றும் மேற்கில் தலா 51, வடக்கில் 49, தெற்கில் 37 என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக, மாநகராட்சியின் வாகனங்களைத் தவிர்த்து, ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் தனியாக நிதி செலவிடப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, மேயர், கமிஷனர், வி.ஐ.பி.,பயன்பாட்டுக்கென மூன்று இன்னோவா கார்கள் உட்பட 32 வாகனங்கள், அதிகாரிகளின் ஆய்வுக்காகத் தரப்பட்டுள்ளன. எரிபொருளுக்கு ரூ.25 கோடி!மொத்தத்தில் மாநகராட்சி பயன்படுத்தும், 300க்கும் குறைவான வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வரை, எரிபொருள் செலவாவதாகக் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி- செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இந்த வாகனங்களுக்கு 16 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 992 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வண்டிக்கு மாதம் 73 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் செலவாகிறது.பராமரிப்பு பெயரில் 'கொள்ளை'அந்தளவுக்கு மாநகரில் குப்பை அள்ளப்படுவதுமில்லை. ஒரு வண்டிக்கு 200 லிட்டர் டீசல் போடுவதாக பில் வாங்கி 120 லிட்டர் மட்டுமே போடப்படுகிறது. மீதமுள்ள தொகை, இன்ஜினியர், வண்டி டிரைவர், பங்க் நிர்வாகி ஆகியோரால் பகிரப்படுகிறது. பராமரிப்பு என்ற பெயரில் பொறியாளர்கள் அடிக்கின்ற தொகைதான் அதிகமாகவுள்ளது. 2014லிருந்து 2018 வரை மட்டும், மாநகராட்சி வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவாக 53 கோடியே 96 லட்சத்து 59 ஆயிரத்து 299 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
ஆக, வாகனங்களின் எரிபொருள், பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.ஐநுாறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளருக்கு, ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றுத்தரும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு, மாநகராட்சி அதிகாரிகளின் ஊழலும் சொத்துக்குவிப்பும் கண்ணில் தெரியாததுதான் ஆச்சரிய முரண்பாடு! ஒரு வண்டிக்கு 200 லிட்டர் டீசல் போடுவதாக பில் வாங்கி 120 லிட்டர் மட்டுமே போடப்படுகிறது. மீதமுள்ள தொகை, இன்ஜினியர், வண்டி டிரைவர், பங்க் நிர்வாகி ஆகியோரால் பகிரப்படுகிறது.

-நமது நிருபர்-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Ravanan Ramachandran - Chennai,இந்தியா

    இப்படித்தான் கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதித்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகின்றனர் பல அரசியல் வியாதிகளும் மற்றும் அரசு அதிகாரிகளும்....பாவம்....இடைப்பட்ட மனிதன் தான் சாவுகின்றான். எதற்கு எல்லாம் முடிவு எப்போதுதான் வரும் என்று புரியாத புதிராகவே உள்ளது. ஒரு மிகப்பெரிய புரட்சி வந்தால் தான் உண்டு.

  • amuthan - kanyakumari,இந்தியா

    இதற்காக திரு அண்ணாமலை அவர்கள் போராடுவார்களா?.

Advertisement